அன்புள்ள இந்திய ராணுவ வீரர்களுக்கு... 3ஆம் வகுப்பு சிறுவன் எழுதிய நெகிழ்ச்சியான கடிதம்!
இந்திய ராணுவம் சிறுவனின் கடிதத்தை எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. "இளம் வீரருக்கு நன்றி" என்றும் அந்தப் பதிவில் கூறியிருக்கிறது.
கேரளாவின் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள இந்திய ராணுவ வீரர்களின் சேவையைப் பாராட்டி 3ஆம் வகுப்பு மாணவன் எழுதிய உருக்கமான கடிதம் சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.
வயநாட்டில் சென்ற செவ்வாய்க்கிழமை நள்ளிரவில் ஏற்பட்ட இரண்டு பிரமாண்ட நிலச்சரிவுகளில் 200க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். இன்னும் 300 க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர்.
ராணுவக் குழுக்கள் 500 க்கும் மேற்பட்ட வீரர்களுடன், நிலச்சரிவுகளால் பாதிக்கப்பட்ட தேயிலைத் தோட்டங்கள் மற்றும் கிராமங்களுக்குச் சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளன. இந்நிலையில் கேரளாவைச் சேர்த்த 3ஆம் வகுப்பு மாணவர் இந்திய ராணுவத்துக்குக் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
கேரள வெள்ளத்தில் ஹீரோவான மஹிந்திரா பொலிரோ! வைரலான மீட்புக் குழுவின் வீடியோ!!
AMLP பள்ளி மாணவரான ரையான் தனது கடிதத்தில், "அன்புள்ள இந்திய ராணுவமே, எனது அன்புக்குரிய வயநாடு மிகப்பெரிய நிலச்சரிவில் சிக்கி, பெரிழவுக்கு உள்ளாகி இருக்கிறது. இடிபாடுகளில் சிக்கியவர்களை நீங்கள் மீட்பதைக் கண்டு நான் பெருமையும் மகிழ்ச்சியும் அடைந்தேன்" என்று அந்த மலையாளக் கடிதத்தில் கூறியிருக்கிறார்.
"நீங்கள் பிஸ்கட் சாப்பிடும் வீடியோவைப் பார்த்தேன், அது உங்கள் பசியைப் போக்கியிருக்கும் என நம்புகிறேன். நீங்கள் ஒரு பாலம் கட்டிய காட்சி என்னை மிகவும் கவர்ந்தது. நானும் ஒரு நாள் இந்திய ராணுவத்தில் சேர்ந்து என் தேசத்தை பாதுகாக்க விரும்புகிறேன்" என்று அவர் தனது கடிதத்தில் கூறியுள்ளார்.
இந்திய ராணுவம் இந்தக் கடிதத்தை தெற்கு கமாண்டின் அதிகாரபூர்வ எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. "இளம் வீரருக்கு நன்றி" என்றும் அந்தப் பதிவில் கூறியிருக்கிறது.
"உங்கள் இதயப்பூர்வமான வார்த்தைகள் ஆழமாக எங்கள் மனத்தை தொடுகின்றன. துன்ப காலங்களில், நம்பிக்கையின் கலங்கரை விளக்கமாக செயல்படுகிறோம் என்பதை உங்கள் கடிதம் மீண்டும் உறுதிப்படுத்துகிறது. உங்களைப் போன்ற ஹீரோக்கள் எங்களால் முடிந்த அனைத்தையும் செய்ய எங்களுக்கு ஊக்கமளிக்கிறார்கள். நீங்கள் ராணுவ சீருடை அணியும் நாளுக்காக நாங்கள் ஆவலுடன் காத்திருக்கிறோம். இணைந்து நிற்போம், தேசத்தைப் பெருமைப்படுத்துவோம். உங்கள் தைரியத்திற்கும் உத்வேகத்திற்கும் நன்றி" என்று இந்திர ராணுவம் பதில் அளித்துள்ளது.
இந்திய ராணுவத்தின் மெட்ராஸ் இன்ஜினியரிங் குரூப் 190 அடி நீளமுள்ள பெய்லி பாலத்தை 32 மணிநேரத்தில் கட்டி முடித்துள்ளது. இது வயநாட்டில் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட முண்டக்கை மற்றும் சூரல்மலை பகுதிகளை இணைக்க உதவுகிறது. இந்தப் பாலம் கட்டும் பணி புதன்கிழமை இரவு 9.30 மணிக்கு தொடங்கி வியாழக்கிழமை மாலை 5.30 மணிக்கு நிறைவடைந்தது.
இந்தியா அமெரிக்க சம்பளத்தில் 1/4 பங்கை எட்டவே 75 வருஷம் ஆகும்: உலக வங்கி கணிப்பு