Dead little girl treatment

நாட்டின் தலைநகரான டெல்லியில் மலேரியா, சிக்கன் குன்யா, டெங்கு ஆகிய தொற்று நோய்கள் வேகமாக பரவி வருகிறது. தொற்று நோய்கள் காரணாக டெல்லியில் 700-க்கும் மேற்பட்ட உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. 

டெல்லியைச் சேர்ந்தவர் ஜெயந்த் சிங். இவரது மகள் ஆத்யா சிங் (7). இவருக்கு காய்ச்சல் காரணாக துவாரகாவில் உள்ள ராக்லேண்ட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் நடத்தப்பட்ட சோதனையில் ஆத்யாவுக்கு டெங்கு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து மருத்துவர்களின் அறிவுரைப்படி, குருகிராமில் உள்ள போர்ட்டீஸ் மருத்துவமனையில் சேர்த்தார். ஜெயந்த் சிங். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் சிறுமி ஆத்யா சிங் உயிரிழந்தார்.

இந்த நிலையில் ஆத்யா சிங்கின் தந்தை ஜெயந்த் சிங், நாளிதழ் ஒன்றுக்கு பேட்டி அளித்திருந்தார். அதில், டெங்குவால் பாதிக்கப்பட்ட மகள் ஆத்யா சிங்குவுக்காக மருத்துவமனையில் 15 நாட்கள் தங்கியிருந்ததாகவும். 15 நாட்களுக்கு 15 லட்சம் ரூபாய் கொடுக்கப்பட்டதாகவும் தெரிவித்தார். 

7 வயது சிறுமிக்கு ஒரு நாளைக்கு 40 சிரிஞ்சுகளில் ரத்த மாதிரிகளை எடுத்துள்ளனர் என்றும் மொத்தம் 600 சிரிஞ்சுகளை பயன்படுத்தியுள்ளனர் என்றும் கட்டணத் தொகையில் குறிப்பிட்டுள்ளது. இன்சூரன்ஸ் கட்டணத்துக்கு மேல் மருத்துவமனை பில் சென்று விட்டால், அந்த நிர்வாகத்தினர் பணம் கேட்டு நச்சரிப்பதை வாடிக்கையாக கொண்டுள்ளனர் என்றும் அவர் குற்றம் சாட்டினார். 

கடந்த செப்டம்பர் 14 ஆம் தேதி மருத்துவர்கள் எங்களிடம் கூறும்போது, சிறுமியின் மூளை 70 முதல் 80 சதவிகிதம் வரை பாதித்துள்ளது என்றும் முழுவதுமாக மீட்க முடியாது என்றும் மருத்துவர்கள் கூறினர். ஆனால், ரூ.15 லட்சம் மதிப்பிலான பிளாஸ்மா சிகிச்சை அளிக்க எங்களை மருத்துவர்கள் நிர்பந்தித்தனர். இதனால் நாங்கள் வேறு மருத்துவமனைக்கு கொண்டு செல்கிறோம் என்று சொன்னவுடன், அவர் இறந்துவிட்டதாக எங்களிடம் கூறினர். போர்ட்டீஸ் மருத்துவமனையில் எங்களது மகள் ஏற்கனவே இறந்திருக்கலாம் என்றும், பணம் பறிக்கும் நோக்கத்திலேயே மருத்துவர்கள் செயல்பட்டுள்ளதாக சந்தேகம் எழுந்துள்ளதாகவும் கூறினார்.

சிறுமிக்கு சிகிச்சை அளிப்பதில் மருத்துவர்கள் எந்த தவறையும் செய்யவில்லை என்று மருத்துவமனை நிர்வாகம் கூறியுள்ளது. செப்டம்பர் 14 தேதி மருத்துவர்களின் அறிவுரையை மீறி அவர்கள் வேறு மருத்துவமனைக்கு கொண்டுசெல்ல முயற்சித்தனர். அப்போது சிறுமி இறந்து விட்டதாகவும் நிர்வாகம் தெரிவித்தது. தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட சிறுமிக்கு கொடுக்கப்பட்ட மருந்துகள் அனைத்தும் மருத்துவமனை பதிவுகளில் உள்ளது. மருந்துக்கான உரிய விலை வசூலிக்கப்பட்டதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது.

சிறுமிக்கு மருத்துவம் அளிக்கப்பட்ட தொகை குறித்து ஜெயந்த் சிங், மத்திய சுகாதார துறை அமைச்சர் ஜே.பி. நட்டாவுக்கு, சிறுமி ஆத்யாவின் மருத்துவமனை ரசீதுகளை அனுப்பியுள்ளார். இது தொடர்பாக மத்திய அமைச்சர் நட்டா, உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சிறுமிக்கு அளிக்கப்பட்ட விவரங்களை தனது இ-மெயில் முகவரிக்கு அனுப்பவும் கூறியுள்ளார்.