இந்தியா மீதான படையெடுப்பு காலம் முடிந்துவிட்டது, அயோத்தி ராமர் கோயிலில் கொடியேற்றும் நிலைக்கு நாடு உயர்ந்துள்ளது என ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் கூறியுள்ளார். நவ 25ம் தேதி பிரதமர் மோடி ஏற்றவுள்ள இந்தக் கொடி, ராமாயணத்தைக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.
"இந்தியா மீதான படையெடுப்பு காலம் முடிந்துவிட்டது. அடிமைத் தளைகள் தகர்க்கப்பட்டு, தற்போது அயோத்தி ராமர் கோயிலில் கொடியேற்றும் உன்னத நிலைக்கு உயர்ந்துள்ளோம்," என்று ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார்.
உத்தரப் பிரதேசத் தலைநகர் லக்னோவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில், மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் முன்னிலையில் பேசுகையில் அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
விஸ்வகுரு இந்தியா
“இந்தியா ஒரு காலத்தில் உலகின் அறிவுக் களஞ்சியமாகவும், 'விஸ்வகுரு'வாகவும் (உலக குரு) திகழ்ந்தது. ஆனால், கடந்த 1000 ஆண்டுகளாக அந்நிய படையெடுப்பாளர்களால் மிதிக்கப்பட்டது. நாம் அடிமைத்தனத்தில் வாழ நேர்ந்தது. வழிபாட்டுத் தலங்கள் இடிக்கப்பட்டன, கட்டாய மதமாற்றங்கள் நடந்தன. இவை அனைத்தும் வரலாற்றில் நடந்தவை.
ஆனால், அந்தப் படையெடுப்பு நாட்கள் (Wo Akraman ke din) முடிந்துவிட்டன. அன்று பாரதம் எப்படி இருந்ததோ, இன்றும் அதே பாரதமாகத் தலைநிமிர்ந்து நிற்கிறது. இப்போது நாம் ராமர் கோயிலில் கொடியேற்றத் தயாராகிவிட்டோம்” என்று அவர் பெருமிதத்துடன் பேசினார்.
அயோத்தி ராமர் கோயிலின் முக்கியக் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்ததைக் குறிக்கும் வகையில், வரும் நவம்பர் 25-ம் தேதி கருவறைக் கோபுரத்தில் கொடியேற்றும் விழா நடைபெறவுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி இந்நிகழ்வில் பங்கேற்று, கோயிலின் உச்சியில் காவிக் கொடியை ஏற்றி வைக்கிறார். இதனையொட்டி அயோத்தியில் மெகா தூய்மைப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
கொடியின் சிறப்பம்சங்கள்
நவம்பர் 25 அன்று ஏற்றப்படவுள்ள கொடி சாதாரணமானது அல்ல. ஆய்வாளர் லலித் மிஸ்ரா, மேவார் காலத்து ஓவியங்கள் மற்றும் வால்மீகி ராமாயணத்தை ஆராய்ந்து இந்தக் கொடியின் வடிவத்தைக் கண்டறிந்துள்ளார். இந்தக் கொடியில் மூன்று முக்கியச் சின்னங்கள் இடம்பெற்றுள்ளன.
ஓம் (Om) ஆன்மீகத்தின் குறியீடு. சூரியன் ராமர் சார்ந்த சூரிய வம்சத்தைச் சேர்ந்தவர் என்பதைக் குறிக்கிறது. ரிஷி காஷ்யபரால் உருவாக்கப்பட்டதாகக் கருதப்படும் கோவிதார மரமும் கொடியில் இடம்பெறும். இது மந்தாரை மற்றும் பாரிஜாத மரங்களின் கலப்பினமாகும்.
இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வைக் காண உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் அயோத்திக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் ஹோட்டல்கள், சுற்றுலாத் துறை மற்றும் உள்ளூர் கைவினைப் பொருட்கள் விற்பனை எனப் பல கோடி ரூபாய் வர்த்தகம் நடைபெறும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
