பாகிஸ்தானில் தலைமறைவாக இருக்கும் மும்பை நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிமுக்குச் சொந்தமாக மும்பையில் இருந்த 3 சொத்துகள் ரூ.11.58 கோடிக்கு ஏலத்தில் விடப்பட்டன.

3 சொத்துகள்

இதுகுறித்து அந்தச் சொத்துகளை ஏலத்தில் விடும் நடவடிக்கையில் ஈடுபட்ட அரசு அதிகாரிகளில் ஒருவர் செய்தியாளர்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:-

‘‘மும்பையின் தெற்குப் பகுதியில் தாவூத் இப்ராஹிமுக்குச் சொந்தமாக 3 சொத்துகள் இருந்தன. அவை ரௌனக் அப்ரோஸ் ஹோட்டல், ஷப்னம் விருந்தினர் இல்லம், டாமர்வாலா கட்டடத்தில் இருக்கும் 6 அறைகள் ஆகும்.

அறக்கட்டளை

இந்த 3 சொத்துகளும், மத்திய நிதியமைச்சகத்தால் கடத்தல்காரர்கள் மற்றும் அன்னியச் செலாவணிக்கு பாதிப்பை ஏற்படுத்துவோர் சட்டத்தின் கீழ் ஏலத்தில் விடப்பட்டன.

இந்த 3 சொத்துகளையும், சைபி புர்ஹானி அறக்கட்டளை எனும் அமைப்பு அதிக விலைக்கு ஏலத்தில் எடுத்தது.

அதன்படி, ரௌனக் அப்ரோஸ் ஹோட்டல் ரூ.4.53 கோடிக்கும், ஷப்னம் விருந்தினர் இல்லம் ரூ.3.52 கோடிக்கும், டாமர்வாலா கட்டடத்தில் இருக்கும் 6 அறைகள் ரூ. 3.53 கோடிக்கும் ஏலத்தில் எடுக்கப்பட்டது என்று அந்த அதிகாரி தெரிவித்தார்.

பாகிஸ்தானில்

மும்பை தொடர் குண்டு வெடிப்பு சம்பவத்தைத் தொடர்ந்து, இந்தியாவில் இருந்து வெளியேறி, பாகிஸ்தானுக்குச் சென்றுவிட்ட தாவூத் இப்ராஹிம் அங்கு தலைமறைவு வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்.

அவரை இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என்று பாகிஸ்தானிடம் இந்திய அரசு வலியுறுத்தி வருகிறது