டார்ஜிலிங்கில் தனி மாநிலம் கோரி நடைபெற்றுவரும் போராட்டத்தால் அங்குள்ள உலக பாரம்பரியச் சின்னங்களில் ஒன்றாக அறிவிக்கப்பட்ட ‘டார்ஜீலிங் ஹிமாலயன் ெரயிலு’க்கு (பொம்மை ெரயில்) ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளதாக ஐ.நா. அமைப்பான யுனெஸ்கோ எச்சரித்துள்ளது.

மேற்கு வங்க மாநிலம், டார்ஜிலிங் மலைப் பகுதியை தனிமாநிலமாக்கக் கோரி கடந்த 50 நாட்களுக்கும் மேலாக கூர்க்கா ஜனமுக்தி மோர்ச்சா (ஜிஜேஎம்) கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தப் போராட்டத்தின்போது அவ்வப்போது வன்முறைச் சம்பவங்களும் அரங்கேறுகின்றன. அரசு அலுவலகங்களுக்குப் போராட்டக்காரர்கள் தீ வைக்கின்றனர்.

டார்ஜிலிங் மலைப் பகுதியில் இருக்கும் மிக முக்கியமான ெரயில் நிலையங்களான கயாபாரி, சொனாடா ஆகியவற்றுக்கும் போராட்டக்காரர்கள் தீவைத்தனர்.

டார்ஜிலிங் ஹிமாலயன் ெரயில் நிறுவனத் தலைமை அலுவலகக் கட்டடத்துக்கும் அவர்கள் தீவைக்க முயற்சி செய்தனர்.

இதுகுறித்து தில்லியில் உள்ள யுனெஸ்கோ அலுவலகத்தின் தலைவர் மோ சிபா கூறியதாவது:-

டார்ஜிலிங் ஹிமாலயன் ெரயிலை, பாதுகாக்கப்பட வேண்டிய உலகப் பாரம்பரிய சின்னங்களில் ஒன்றாக கடந்த 1999-ஆம் ஆண்டு எங்கள் அமைப்பு அறிவித்தது.

நிலச்சரிவு போன்ற இயற்கைப் பேரிடர்களால் அந்த ெரயிலுக்கு ஆபத்து இருந்து வருகிறது. இந்நிலையில், கூர்க்கா போராட்டக்காரர்களால் அந்த ரெயிலுக்கு சேதம் ஏற்பட்டுவிடுமோ என்று கவலைப்படுகிறோம். அந்த ரயிலுக்கு உரிய பாதுகாப்பை அளிக்க வேண்டும்’‘.

இவ்வாறு அவர் கூறினார்.