கொச்சியில் 5 வயது  மகளுக்கு ஸ்கூட்டர் ஓட்ட கொடுத்த விவகாரம் தொடர்பாக தந்தையின் டிரைவிங் லைசென்ஸ் ஒரு வருடம் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளது. கேரள மாநிலம் கொச்சி பள்ளூர்த்தி பகுதியை சேர்ந்தவர் ஷிபுபிரான்சிஸ். நேற்று காலை தனது மனைவி மற்றும் 5 வயது மகள், 2 வயதுடைய குழந்தைகளுடன் இடப்பள்ளி பகுதியில் ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்தார். 2 மகள்களையும் ஸ்கூட்டரின் முன் பகுதியில் நிறுத்தி  இருந்தார். ஸ்கூட்டர் சென்றுகொண்டிருந்த போது தனது 5 வயது குழந்தையிடம் ஸ்கூட்டரை ஓட்ட கொடுத்துள்ளார். அந்த சிறுமி முன்பகுதியில் நின்றவாறு ஸ்கூட்டரை ஓட்டி சென்றார்.

 

இந்த காட்சியை அவருக்கு பின்னால் வந்த காரில் ஒருவர் மொபைலில் வீடியோ எடுத்தார். இது சமூக வலைதளங்களில் வைரலாகி வந்தது. இது தொடர்பாக போக்குவரத்து துறைக்கு தகவல் கிடைத்தது. வீடியோவை ஆதாரமாக கொண்டு வாகனத்தின் பதிவெண் அடிப்படையில் விசாரணை நடைபெற்றது. 

அதைத் தொடர்ந்து ஷிபு பிரான்சிஸ்சின் டிரைவிங் லைசென்சை ஒரு வருடம் சஸ்பெண்ட் செய்தார். தொடர்ந்து இந்த சம்பவம் தொடர்பாக இடப்பள்ளி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சிறுவர்கள் வாகனம் ஓட்டினால் பெற்றோருக்கு தான் தண்டனை அளிக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளனர்.