Cylinder blast in Bangalore
பெங்களூருவில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் சிலிண்டர் வெடித்து விபத்துக்குள்ளானதில் 6 பேர் உயிரிழந்தனர். 3 பேர் படுகாயமடைந்துள்ளனர். மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
பெங்களூருவில் எஜிபுரா பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று உள்ளது. இந்த அடுக்குமாடி குடியிருப்பில் மொத்தம் 6 வீடுகள் உள்ளன. இந்த நிலையில் இன்று காலை 6.30 மணியளவில் குடியிருப்பில் இருந்த வீடு ஒன்றில் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்தது.
சிலிண்டர் வெடித்ததை தொடர்ந்து, கட்டிடம் தரைமட்டமானது. கட்டடம் இடிந்ததைப் பார்த்த அருகில் இருந்தோர், போலீசாருக்கும், தீயணைப்பு துறையினருக்கும் தகவல் அளித்தனர்.
பின்னர் அங்கு வந்த போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் கட்டட இடிபாடுகளில் சிக்கியிருப்பவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இடிபாடுகளில் 6 பேரின் உடல்களை போலீசார் மீட்டனர்.

மேலும், இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்கள் குறித்து போலீசார் தேடி வந்த நிலையில் 3 வயதான சஞ்சனா என்ற குழந்தை உயிருடன் மீட்கப்பட்டார். மீட்கப்பட்ட சஞ்சனா, மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விபத்துக்குள்ளான அடுக்குமாடி குடியிருப்பு மிகவும் குறுகலான பகுதியில் அமைந்திருப்பதால் மிகுந்த சிரமத்துக்கு இடையே மீட்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருவதாக தீயணைப்பு துறையினர் தெரிவித்தனர். தொடர்ந்து மீட்பு பணி நடைபெற்று வரும் என்றும் அவர்கள் கூறினர். இந்த நிலையில் கர்நாடக உள்துறை அமைச்சர் ராமலிங்கா ரெட்டி நேரில் சென்று பார்வையிட்டார்.
