வங்கக் கடலில் உருவான அதி நவீன பானி புயல் பலத்த மழையுடன், 175 கிலோமீட்டர் வேகத்தில் ஓடிசாவின் கோபால்பூர்-சந்த்பாலி இடையே தற்போது கரையை கடக்கத் தொடங்கியுள்ளது. இதனால், கடற்கரை மாவட்டங்களில் வசிக்கும் 11 லட்சம் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர்.

 

வங்கக்கடலில் உருவான பானி புயல் தற்போது ஒடிசாவை நோக்கி நகா்ந்து இன்று பிற்பகலில் பூரி அருகே கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தற்போது கரையை கடக்கத் தொடங்கியுள்ளது. ஒடிசாவில் கோபால்பூர்-சந்திரபாலிக்கு இடையே பூரிக்கு அருகில் காலை 8 மணி முதல் 11 மணி வரையில் கரையை கடக்கும் நிகழ்வு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மணிக்கு 175 கிலோமீட்டர் வேகத்தில் கரையை கடக்கிறது. கரையை கடக்கும் பொழுது மணிக்கு 240 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. 

புயல் தாக்கும் பகுதிகளில் இருந்து 10 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் வெளியேற்றப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். பயணிகளின் பாதுகாப்பு கருதி 147 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. புவனேஸ்வர் விமான நிலையம் மூடப்பட்டுள்ளது. போனி புயல் கரையை கடந்து வருவதால் ஆந்திராவில் விசாகப்பட்டினம், மச்சிலிப்பட்டினம், கிருஷ்ணாபட்டினம், காக்கிநாடா உள்ளிட்ட துறைமுகங்களில் 10 ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

புயல் கரையை கடக்கம் போது  யாரும் வெளியில் வர வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. புயல் கரையை கடந்து வருவதால் பலத்த காற்றுடன் தற்போது கனமழை பெய்து வருகிறது.