ஜோமேட்டோ வாடிக்கையாளர் ஒருவர், மாற்றுத்திறனாளி டெலிவரி ஊழியர் மூலம் பெற்ற உணவு டெலிவரி அனுபவத்தை லிங்க்ட்இன்-இல் பகிர்ந்துள்ளார். வாடிக்கையாளருக்கு முன்கூட்டியே தெரிவித்து, சுமூகமான டெலிவரியை உறுதி செய்த ஜோமேட்டோவுக்கு பாராட்டுகள் குவிகின்றன.

ஜோமேட்டோ (Zomato) உணவு விநியோக நிறுவனம் முன்னெடுத்துள்ள ஒரு செயல் இணையத்தில் வைரலாகி அனைவரின் பாராட்டையும் பெற்றுள்ளது. ஜெமேட்டோவின் இந்த முன்னெடுப்பு உணவு விநியோகத் துறையில் தொழில்நுட்பமும், மனித நேயமும் கைகோர்த்துப் பயணிக்க முடியும் என்பதை உணர்த்தும் வகையில் உள்ளது.

ஒரு ஜோமேட்டோ வாடிக்கையாளர் தனது உணவு ஆர்டர் அனுபவம் குறித்து லிங்க்ட்இன் (LinkedIn) சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார். அந்த வாடிக்கையாளர் ஜோமேட்டோவில் வழக்கம்போல் உணவை ஆர்டர் செய்த சிறிது நேரத்திலேயே, அவருக்கு ஒரு தானியங்கி அழைப்பு வந்தது. அவருக்கு உணவு டெலிவரி செய்பவர் ஒரு மாற்றுத்திறனாளி என்றும் இந்த ஆர்டரை அவரிடமிருந்து பெற்றுக்கொள்ள சம்மதமா என்றும் கேட்கப்பட்டது.

இந்தத் தகவலை ஏற்றுக் கொண்ட சில நிமிடங்களில், அந்த டெலிவரி ஊழியர் வாடிக்கையாளருக்கு நேரடியாக அழைத்துப் பேசினார். "தாங்கள் தயவுசெய்து கீழே வந்து ஆர்டரைப் பெற்றுக் கொள்ள முடியுமா?" என்று அவர் கோரிக்கை விடுத்தார். அவருடன் நடந்த உரையாடல் "கனிவானதாகவும் மரியாதையுடனும் இருந்தது. எந்தச் சிரமமும் இல்லை" என்று அந்த வாடிக்கையாளர் தனது பதிவில் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.

வடிவமைப்புக்குப் பாராட்டு

இந்த அனுபவத்தில் அவருக்கு மிகவும் பிடித்தது என்னவென்றால், இந்த உள்ளடக்கிய அமைப்பு எந்தவொரு விசேஷ முயற்சியும் இல்லாமல், மிகவும் சாதாரணமாகச் செயல்பட்டதுதான். உணவு சரியான நேரத்தில் வந்து சேர்ந்தது, தொடர்பு தெளிவாக இருந்தது, ஒட்டுமொத்த அனுபவமும் ஒரு சாதாரண விநியோகத்தைப் போலவே இருந்தது. "வாடிக்கையாளர் மற்றும் ஊழியர் ஆகிய இருவரையும் ஆதரிக்கும் ஒரு புத்திசாலித்தனமான வடிவமைப்பு இதுதான்," என்று அவர் புகழ்ந்துள்ளார்.

திறமை மற்றும் நேரத்தைக் கருத்தில் கொண்டு, அனைவருக்கும் மரியாதை, தெளிவு மற்றும் சரியான நேரத்தை உறுதி செய்யும் ஒரு செயல்முறைக்கு ஜோமேட்டோஒரு சிறந்த எடுத்துக்காட்டு என்றும் அந்தப் பதிவில் பாராட்டப்பட்டுள்ளது.

சமூக வலைத்தளங்களின் வரவேற்பு

இந்தப் பதிவு உடனடியாக இணையத்தில் பரவி, பல்வேறு துறைகளைச் சேர்ந்த பயனர்களின் பாராட்டுகளைப் பெற்றது. ஜோமேட்டோமாற்றுத்திறனாளிகளைத் தனது செயல்பாடுகளில் இணைத்துக் கொண்டதைப் பலர் வரவேற்றனர்.

ஒரு பயனர், "ஜோமேட்டோவின் பன்முகத்தன்மை மிகவும் ஈர்க்கக்கூடிய திட்டங்களில் ஒன்றாகும். இது கடந்த ஆண்டு பிசிசிஐ (BCCI) விருதையும் வென்றது" என்று குறிப்பிட்டார். மற்றொருவர், "பன்முகத்தன்மை வெறும் முழக்கமாக இல்லாமல், நிறுவனத்தின் கலாச்சாரத்தின் ஒரு பகுதியாக இருக்கும் இடங்களை நான் விரும்புகிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்தச் சிறப்பான அனுபவத்துக்கு வழிவகுத்த தொழில்நுட்பத்துக்கும் பல பயனர்கள் பாராட்டு தெரிவித்தனர். இந்த மாற்றுத்திறனாளி ஊழியர் பயன்படுத்தியது, ஐஐடி மெட்ராஸில் (IIT Madras) உருவாக்கப்பட்ட நியோமோஷன் வீல்சேர் (NeoMotion wheelchair) போன்ற சாதனமாக இருக்கலாம் என்றும் பலர் கருத்துத் தெரிவித்தனர்.