Curious Case of School Bags With Akhilesh Yadav Photo in BJP Gujarat

குஜராத்தில் பள்ளிப்பைகளில் உ.பி. முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ் படம் அச்சடிக்கப்பட்டிருந்தது அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

குஜராத் மாநிலத்தின் பழங்குடி கிராமமான சங்கேதாவில் நடைபெற்ற விழா ஒன்றில், பள்ளி மாணவர்களுக்கு பஞ்சாயத்து சார்பில் வழங்கப்பட்ட புத்தகப் பைகளில் உ.பி. முன்னாள் முதல்-அமைச்சர் அகிலேஷ் யாதவ் படம் இருந்தது.

அதாவது சம்பந்தப்பட்ட அந்த கிராமப் பஞ்சாயத்து ‘லோகோ’தான் பைகளில் ஒட்டப்பட்டிருந்தது, ஆனால், அதைப் பிய்த்து எடுத்துப் பார்த்தால் அகிலேஷ் யாதவ் படம் அச்சிடப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

இதனையடுத்து கருத்து தெரிவித்த சமாஜ்வாதி கட்சியின் எம்.எல்.சி.யும் அகிலேசுக்கு நெருங்கியவருமான சுனில் சிங் சாஜன், “இது உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் குஜராத் அரசின் வெட்கங்கெட்ட தனத்தையே காண்பிக்கிறது.

அகிலேஷ் படம் உள்ள பள்ளிப்பைகள் எப்படி குஜராத்தில் விநியோகிக்கப்பட்டது? உ.பி.பள்ளிகளுக்கான பைகளை திருடினால்தான் இது சாத்தியம். சாமியார் என்ற பெயரில் ஆதித்யநாத் ஒரு களங்கம். உ.பி. அரசு இந்தப் பைகள் எப்படி குஜராத் சென்றது என்பதை தெரிவிக்க வேண்டும்” என்றார்.

இது குறித்து விளக்கம் அளித்த குஜராத் கல்வித்துறை அதிகாரி ஒருவர், ‘‘இந்தப் பைகள் சூரத்தைச் சேர்ந்த நிறுவனம் ஒன்று குஜராத்துக்கு அனுப்பியுள்ளது. இது குறித்து விசாரித்து வருகிறோம்’’ என்று தெரிவித்தார்.

சமாஜ்வாதி கட்சி ஆட்சியிலிருந்த போது பள்ளி மாணவர்களுக்கு 1.8 கோடி பைகளை அளிப்பதாக அறிவித்தது. ஆனால் தேர்தல் அறிவிக்கப்பட்டவுடன் இந்த நடைமுறை பாதியிலேயே நிறுத்தப்பட்டது.

உ.பி. முதல்வர் யோகி ஆதித்ய நாத் அகிலேஷ் படத்துடனேயே பைகளை அளிக்க அனுமதித்துள்ளார். மக்கள் பணத்தை விரயம் செய்ய அவர் விரும்பாததே இதற்கு காரணம் என்று கூறப்பட்டது.