ஊரடங்கை மீறினால் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்க வேண்டும் என கொரோனா தடுப்பு நடவடிக்கையாக மாநில அரசுகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. 

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பாதிப்பை தடுப்பதற்காக, இந்தியா முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்கு மட்டும் வெளியில் வரலாம் என்று அரசு அறிவித்துள்ளது. மற்ற நேரங்களில் பொதுமக்கள் தேவை இல்லாமல் வெளியில் வாகனங்களில் சுற்றக்கூடாது என்றும் அரசு கட்டுப்பாடு விதித்துள்ளது. இதனால் தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் போலீசார் தீவிர ரோந்து பணியிலும், சோதனை சாவடிகள் அமைத்தும் பொதுமக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்தி வருகிறார்கள். மீறி வருபவர்களுக்கு கடுமையாக தண்டனையும் கொடுத்து வருகின்றனர். அப்படி இருந்த போதிலும் மக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த முடியவில்லை.

இந்நிலையில், கொரோனா பாதிப்பு தொடர்பாக அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி காணொளி காட்சி மூலம் இன்று ஆலோசனை மேற்கொண்டார். அதில், கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் இந்தியாவில் வேகமாக பரவி வருவதால் ஊரடங்கை அமல்படுத்துவதில் மாநில அரசுகள் கண்டிப்புடன் இருக்க வேண்டும் என பிரதமர் அறிவுறுத்தியாக தகவல் வெளியானது. 

இதனையடுத்து, மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் அனைத்து மாநிலங்களுக்கும்  கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது. அதில், ஊரடங்கை மீறி தேவையில்லாமல் வெளியே சுற்றுபவர்கள் யாராக இருந்தாலும் தயவு தாட்சண்யமின்றி கைது செய்து 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்க  என்று கூறப்பட்டுள்ளது.