தயிர் சாப்பிடும் போட்டியில் புதிய சாதனை படைத்த முதியவர்!
பீகாரில் நடைபெற்ற தயிர் சாப்பிடும் போட்டியில் சங்கர் காந்த் என்ற முதியவர் 3 நிமடங்களில் 3.6 கிலோ தயிரைச் சாப்பிட்டு புதிய சாதனை படைத்துள்ளார்.
பீகார் மாநிலம் பாட்னாவில் ஆண்டுதோறும் தயிர் சாப்பிடும் போட்டி நடைபெறும். அந்த மாநிலத்தின் சுதா கூட்டுறவு பால் விநியோக நிறுவனம் நடத்தப்படும் இந்தப் போட்டி 10 ஆண்டுகளாக நடத்தப்படுகிறது.
இந்த ஆண்டுக்கான போட்டி நேற்று, புதன்கிழமை, பாட்னாவில் நடைபெற்றது. இதில் கலந்துகொள்ள 700 பேர் விண்ணப்பித்திருந்த நிலையில் 500 பேருக்கு மேல் போட்டியில் பங்கேற்றார்கள்.
போட்டியில் கலந்துகொள்ள பீகார் மட்டுமின்றி உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், ஜார்க்கண்ட் போன்ற அண்மை மாநிலத்திலிருந்தும் வந்திருந்தனர்.
80 வயதிலும் மாரத்தான் ஓட்டத்தில் கலந்துகொண்ட சூப்பர் பாட்டி!
போட்டி பல்வேறு பிரிவுகளாக நடத்தப்பட்டது. போட்டிக்கான 3 நிமிட நேரத்தில் அதிக அளவு தயிரைச் சாப்பிட வேண்டும். முடிவில், பிரேமா திவாரி என்பவர் 2.718 கிலோ தயிரை சாப்பிட்டு பெண்கள் பிரிவில் பரிசைத் தட்டிச் சென்றார். ஆண்கள் பிரிவில் முதல் இடம் பிடித்த அஜய் குமார் 3.420 கிலோ தயிரை விழுங்கினார்.
முத்த குடிமக்கள் பிரிவில் பிரனாய் சங்கர் காந்த் என்பவர் மூன்றே நிமிடத்தில் 3.647 கிலோ தயிரைச் சாப்பிட்டு வெற்றி பெற்றார். போன ஆண்டும் இதே போட்டியில் கலந்துகொண்டு பரிசு பெற்றவர் இவர். அதுமட்டுமல்ல, 2020ஆம் ஆண்டில் 3 நிமிடத்தில் 4 கிலோ தயிரை காலி செய்து அசர வைத்த தயிர் பிரியர் இவர்.
Rozgar Mela: 71,000 பேருக்கு அரசு வேலை! நாளை பணி நியமன ஆணையை வழங்குகிறார் பிரதமர் மோடி!
இரட்டையர் பிரிவு போட்டியும் நடத்தப்பட்டது. அதில் அனில் குமார், ராஜிவ் ரஞ்சன் ஆகியோர் ஆண்கள் பிரிவிலும், மது குமாரி, நிரு குமார் ஆகியோர் பெண்கள் பிரிவிலும், சஞ்சை திரிவேதி, குந்தன் தாக்கூர் ஆகியோர் மூத்த குடிமக்கள் பிரிவிலும் வெற்றி அடைந்தனர்.
சுதா கூட்டுறவு பால் விநியோக நிறுவனத்தின் தலைவர் சஞ்சை குமார் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கி, சுதா நிறுவனத்தின் பால் பொருள்கள் பயன்பாட்டை பரவலாக்க உதவ வலியுறுத்திப் பேசினார். இயக்குநர் ஶ்ரீநாராயணன் தாக்கூர் பங்கேற்ற அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.