நான் பதவியை எதிர்பார்த்து கட்சியில் இல்லை: சி.டி.ரவி!
பதவியை எதிர்பார்த்து கட்சியில் நான் இல்லை என்று பாஜக மூத்த தலைவர் சிடி ரவி தெரிவித்துள்ளார்
கர்நாடகா மாநில பாஜக தலைவராக முன்னாள் முதல்வர் எடியூரப்பாவின் மகன் விஜயேந்திரா (47) நியமனம் செய்யப்பட்டுள்ளார். கடந்த 2019ஆம் ஆண்டு முதல் கர்நாடக மாநில பாஜக தலைவராக செயல்பட்டு வந்த நளின் குமார் கட்டீல் மாற்றப்பட்டு, அவருக்கு பதிலாக எடியூரப்பாவின் இளைய மகன் விஜயேந்திரா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
கர்நாடக மாநில பாஜகவின் 10ஆவது தலைவராக பொறுப்பேற்கவுள்ள விஜயேந்திராவின் நியமனம், கட்சிக்குள் எடியூரப்பாவின் செல்வாக்கை காட்டும் வகையில் உள்ளது. அத்துடன், கடந்த சட்டமன்றத் தேர்தலில் ஷிகாரிபுரா தொகுதியில் போட்டியிட்டு முதன்முறையாக எம்.எல்.ஏ.வாக வெற்றி பெற்ற விஜயேந்திரா, திறமையான தலைவராகவும் கருதப்படுகிறார்.
அதேசமயம், கர்நாடக மாநில கட்சியின் மூத்த தலைவர்களை புறக்கணித்துவிட்டு, விஜயேந்திராவுக்கு மாநில தலைவர் பதவி வழங்கப்பட்டது பலரையும் அதிருப்தியில் ஆழ்த்தியிருப்பதாக கூறப்படுகிறது. விஜயேந்திராவின் நியமனத்தை எடியூரப்பாவின் ஆதரவாளர்கள் பெரிதும் வரவேற்றுள்ள நிலையில், பாஜக தேசிய பொதுச் செயலாளர் பி.எல்.சந்தோஷின் முகாமைச் சேர்ந்த பல தலைவர்கள் தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.
குறிப்பாக, பி.எல்.சந்தோஷ் முகாமை சேர்ந்த சி.டி. ரவி மிகுந்த அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது. ஏனெனில், சட்டமன்றத் தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று நளின் குமார் கட்டீல் தனது பதவியை ராஜினாமா செய்ததும் பாஜக மாநிலத் தலைவராக சி.டி,ரவிதான் நியமிக்கப்படுவார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது.
உதய்பூர் தையல்காரர் கொலையாளிகளுக்கு பாஜகவுடன் தொடர்பு: முதல்வர் அசோக கெலாட் பரபரப்பு குற்றச்சாட்டு!
இந்த நிலையில், பதவியை எதிர்பார்த்து கட்சியில் நான் இல்லை என்று பாஜக மூத்த தலைவர் சிடி ரவி தெரிவித்துள்ளார். கர்நாடக பாஜக மாநில தலைவர் பதவி என்பது அதிகாரம் அல்ல. அதுவொரு பொறுப்பு என்றும், அந்த பொறுப்பை யாரும் கேட்டு பெற முடியாது என்பதுடன், பதவியை எதிர்பார்த்து கட்சியில் நான் இல்லை என்றும் சி.டி.ரவி தெரிவித்துள்ளார்.
பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசிய சி.டி.ரவியிடம் இதுதொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “விஜயேந்திராவுக்கு நான் எனது வாழ்த்துகளை தெரிவித்தேன். கட்சியின் மாநில தலைவர் பதவி என்பது அதிகாரம் அல்ல; அதுவொரு பொறுப்பு. அந்த பொறுப்பை யாரும் கேட்டு பெற முடியாது. நான் எந்த பதவியையும் எதிர்பார்த்து கட்சியில் இருக்கவில்லை. 25 ஆண்டுகளாக கட்சி தலைமை எனக்கு எந்த பொறுப்பு கொடுத்தாலும், என் பணியை செவ்வனே செய்திருக்கிறேன்.” என்றார்.
நான் எந்த பதவியும் கேட்கவில்லை என்பதால் அதிருப்தி என்ற பேச்சுக்கே இடமில்லை. விஜயேந்திராவுடன் இணைந்து பணியாற்றுவேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதனிடையே, தனது மகனுக்கு ஒத்துழைப்பை அதிகரிக்கும் வகையில், மூத்த தலைவர்களின் அதிருப்தியை தீர்க்கும் முயற்சிகளில் எடியூரப்பா இறங்கியுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.