சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தீவிர ரசிகர் ஒருவர், தனது திருமண பத்திரிக்கையை ஸ்பெஷலாக வடிவமைத்துள்ளார். அதாவது சென்னை ஐபிஎல் டிக்கெட் போன்றே திருமண பத்திரிக்கையை அவர் வடிவமைத்துள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தீவிர ரசிகர் கே.வினோத். இவருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்ட நிலையில், தனது திருமண பத்திரிகையை சென்னை அணி விளையாடும் ஐபிஎல் போட்டிக்கான டிக்கெட்டைப் போன்று வடிவமைத்து அச்சிட்டுள்ளார். 

இதில், மணமகன் - மணமகள், திருமணம் நடைபெறும் நாள், இடம், வரவேற்பு நிகழ்ச்சி ஆகியவற்றை அந்த பத்திரிக்கையில் குறிப்பட்டுள்ளார். பத்திரிகையின் இடது பக்கத்தில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் தோனி, கோப்பையை வைத்துக் கொண்டு இருப்பது போன்று வடிவமைத்துள்ளார். மணமகன் - மணமகள் பெயர்களைக் குறிப்படுகையில், சூப்பர் கிங் கே.வினோத் weds சூப்பர் குயின் சாதனா. இவர்களது திருமணம் நேற்று நடைபெற்ற நிலையில், திருமண பத்திரிக்கையை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

அதில், சூப்பர் ரசிகர் கே.வினோத்துக்கு திருமண வாழ்த்துக்கள் என்றும், திருமண அழைப்பு மிகவும் ஸ்பெஷலாக உள்ளதாகவும், சென்னையின் மீது இருக்கும் பாசத்தை வெளிப்படுத்துவதாக உள்ளது என்றும் பதிவிடப்பட்டுள்ளது. தற்போது இந்த பத்திரிக்கை, சமூக வலைத்தளங்களில் அதிவேகமாக ஷேர் செய்யப்பட்டு வருகிறது.