மேற்கு வங்கத்தில் வாக்குச்சாவடிக்கு வெளியே நாட்டு வெடிகுண்டு வீச்சு
மேற்கு வங்க பஞ்சாயத்துத் தேர்தல் வாக்குப்பதிவு நாளில் தொடங்கி கடந்த நான்கு நாட்களில் நடந்த வன்முறைச் சம்பங்களில் குறைந்தது 20 பேர் பலியாகியுள்ளனர்.

மேற்கு வங்கத்தில் இந்த ஆண்டு பஞ்சாயத்துத் தேர்தல்கள் அறிவிக்கப்படுவதற்கு முன்பே நடந்த வன்முறைகள், வாக்கு எண்ணும் நாளான இன்றும்கூட தொடர்கிறது. ஒரு வாக்கு எண்ணும் மையத்தின் அருகே நாட்டு வெடிகுண்டுகள் வீசப்பட்டன. மற்றொரு இடத்தில் எண்ணும் மையத்தை முற்றுகையிட்டவர்களை போலீஸார் தடியடி நடத்தி கலைத்தனர்.
பஞ்சாயத்துத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை பலத்த பாதுகாப்பு மற்றும் மத்தியப் படையினரின் கண்காணிப்பில் இன்று காலை 8 மணிக்குத் தொடங்கியது. இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் இருந்தபோதிலும், தெற்கு 24 பர்கானாஸில் உள்ள டயமண்ட் துறைமுகத்தில் உள்ள ஒரு வாக்கு எண்ணும் மையத்திற்கு வெளியே நாட்டு குண்டுகள் வெடிக்கப்பட்டுள்ளன.
ஹவுராவில் உள்ள ஒரு வாக்கு எண்ணும் மையத்திற்கு வெளியே ஏராளமான மக்கள் முற்றுகையிட்டதால் போலீசார் தடியடி நடத்தி அவர்களை கலைந்துபோக வைத்தனர். முன்னதாக, வன்முறை காரணமாக பஞ்சாயத்து தேர்தலுக்கான வாக்குப்பதிவு செல்லாது என அறிவிக்கப்பட்ட 19 மாவட்டங்களில் உள்ள 696 வாக்குச்சாவடிகளில் நேற்று மறுவாக்குப்பதிவு நடத்தப்பட்டது.
மேற்கு வங்கத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சியான பாஜகவுக்கு இடையேயான கடும் போட்டி நிலவும் சூழலில் 2024 மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக நடைபெறும் பஞ்சாயத்து தேர்தல் முடிவுகள் கவனம் பெற்றுள்ளன. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது முதல் மாநிலம் முழுவதும் நடந்துவரும் வன்முறைச் சம்பவங்கள் அரங்கேறின.
தேர்தல் வாக்குப்பதிவு நாளில் தொடங்கி கடந்த நான்கு நாட்களில் நடந்த வன்முறைச் சம்பங்களில் குறைந்தது 20 பேர் பலியாகியுள்ளனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனிடையே மாநில ஆளுநர் ஆனந்த போஸ், மாநிலத்தில் அதிகரித்துவரும் வன்முறையை ஒடுக்க உறுதியான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
நேற்று டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை நேரில் சந்தித்த ஆளுநர் ஆனந்த போஸ் ஜூலை 8ஆம் தேதி, பஞ்சாயத்து தேர்தல் வாக்குப்பதிவு நாளில் நடந்த வன்முறை குறித்து எடுத்துரைத்தார். இன்று மீண்டும் அவர் மேற்கு வங்கம் திரும்பினார்.