crowd stuck deaths in mumbai railway station

மும்பையின் எல்ஃபின்ஸ்டோன் சாலை ரயில் நிலையத்தில் மக்கள் நடைபாதை மேம்பாலத்தில் திடீரென மக்கள் கூட்டம் அலைமோதியது. இதனால் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 22 பேர் மூச்சுத்திணறி உயிரிழந்தனர்.

இன்று காலை நடைபாதை மேம்பாலத்தில் கடும் கூட்ட நெரிசல் இருந்ததாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர். கனமழை பெய்ததால் இந்த நடைபாதை மேம்பாலத்தில் மழைக்காக ஒதுங்கியவர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. இந்நிலையில் நடைபாதை மேம்பாலத்தின் தகரக்கூரையின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. இதனால் மக்களிடையே பீதியும் பரபரப்பும் ஏற்பட்டு முண்டியடித்துக் கொண்டு வெளியேற முயன்றதில் கடும் நெரிசல் ஏற்பட்டது என்று ரயில்வே போலீஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.

மின்கசிவு ஏற்பட்டதாக வந்த தகவலை ரயில்வே போலீஸ் அதிகாரிகள் மறுத்துள்ளனர்.

இதில் 22 பேர் கூட்ட நெரிசலில் சிக்கி மூச்சுத்திணறி இறந்தனர், காயமடைந்த 30 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கூட்ட நெரிசலில் சிக்கி 22 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இரங்கல் தெரிவித்துள்ளார்.