CP Radhakrishnan Elected as 15th Vice President of India : துணை குடியரசுத் தலைவருக்கான தேர்தலில் NDA-வின் வேட்பாளர், சி பி ராதாகிருஷ்ணன் 152 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 15ஆவது துணை குடியரசு தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

CP Radhakrishnan Elected as 15th Vice President of India : குடியரசு துணை தலைவராக இருந்த ஜெகதீப் தன்கரின் பதவிக்காலம் இன்னும் 2 ஆண்டுகள் இருந்த நிலையில் அவர் குடியரசு துணை தலைவர் பதவியை ராஜீனாமா செய்தார். இதைத் தொடர்ந்து குடியரசு துணை தலைவருக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதில், பாஜகவின் தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர் பாஜக மூத்த தலைவரும், மகாராஷ்டிரா ஆளுநருமான சி.பி.ராதாகிருஷ்ணன் போட்டியிட்டார். எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி சார்பில் உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி சுதர்சன் ரெட்டி போட்டியிட்டார்.

காலை 8 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 5 மணி வரை நடைபெற்றது. இதையடுத்து மாலை 6 மணிக்கு வாக்கு எண்ணும் பணி நடைபெற்றது. இதில், பாஜக தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர் சி பி ராதாகிருஷ்ணன் 452 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். இந்தியா கூட்டணி வேட்பாளர் பி சுதர்சன் ரெட்டி 300 வாக்குகள் மட்டுமே பெற்ற நிலையில் தமிழரான ராதாகிருஷ்ணன் 152 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று நாட்டின் 15ஆவது துணை குடியரசுத் தலைவராக தேர்வு செய்யப்பட்டார். 

இந்த வெற்றி பாராளுமன்றத்தில் NDA-வின் நிலையை வலுப்படுத்துகிறது, ஏனெனில் ராதாகிருஷ்ணன் இப்போது மாநிலங்களவையின் (ராஜ்யசபா) தலைவராக பணியாற்றுவார். துணை குடியரசு தலைவருக்கு சம்பளம் என்று தனியாக எதுவும் கிடையாது. ஆனால், அவர் பதவி வகிக்கும் ராஜ்யசபா தலைவருக்கான பதவிக்கு மாத சம்பளமாக ரூ.4 லட்சம் வரையில் வழங்கப்படுகிறது. இது தவிர, இலவச வீடு, மருத்துவ வசதி, ரயில் மற்றும் விமானத்தில் இலவச பயணம், தனிப்பட்ட பாதுகாப்பு, மற்றும் ஊழியர்கள் போன்ற பல்வேறு சலுகைகளும் வழங்கப்படுகின்றன.

துணை குடியரசு தலைவராக தேர்வு செய்யப்பட்ட சிபி ராதாகிருஷ்ணன் தமிழகத்தில் திருப்பூர் மாவட்டத்தில் பிறந்துள்ளார். விளையாட்டில் ஆர்வம் கொண்ட இவர், கல்லூரியில் படிக்கும் போது டேபிள் டென்னிஸில் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.