Asianet News TamilAsianet News Tamil

வேண்டாம்! கோமியம் குடிப்பது உடம்புக்கு நல்லதல்ல: கால்நடை ஆராய்ச்சி நிறுவனம் எச்சரிக்கை

பசுவின் சிறுநீரை ஒருபோதும் மனிதர்கள் உட்கொள்ள பரிந்துரைக்க முடியாது என இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனம் (IVRI) உறுதியாகக் கூறியுள்ளது.

Cow urine unfit for humans, says top animal research body
Author
First Published Apr 11, 2023, 10:12 AM IST

மாட்டு சிறுநீரில் தீங்கு விளைவிக்கக்கூடிய பாக்டீரியாக்கள் இருக்கலாம் என்பதால் அவை மனிதர்கள் உட்கொள்ள ஏற்றது அல்ல என்று இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனம் (IVRI) நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனத்தைச் சேர்ந்த போஜ் ராஜ் சிங் தலைமையில் மூன்று பிஎச்.டி மாணவர்கள் கொண்ட குழு நடத்திய ஆய்வில், பசுக்கள் மற்றும் காளைகளின் சிறுநீரில் மாதிரிகள் குறைந்தது 14 வகையான தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களைக் கொண்டிருப்பதைக் கண்டறியப்பட்டுள்ளது. இது வயிற்று நோய்த்தொற்றுகளை ஏற்படுத்தும் எனவும் இந்த ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.

இந்த ஆராய்ச்சியின் முடிவுகள் ரிசர்ச்கேட் (Researchgate) என்ற ஆராய்ச்சிக்கான இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. இது குறித்து தொற்றுநோயியல் பேட்டி அளித்துள்ள போஜ் ராஜ் சிங், "பசு, எருமைகள் மற்றும் மனிதர்களின் 73 சிறுநீர் மாதிரிகளைக் கொண்டு நடந்திய புள்ளிவிவர பகுப்பாய்வு, எருமையின் சிறுநீரில் பாக்டீரியா எதிர்ப்பு செயல்பாடு பசுக்களின் சிறுநீரில் உள்ளதைவிட மிகவும் அதிகம் என்று காட்டுகிறது. சில பாக்டீரியாக்களுக்கு எதிராக எருமையின் சிறுநீர் கணிசமாக அளவுக்கு பயனுள்ளதாக இருக்கிறது." என்று தெரிவித்துள்ளார்.

மேலும், அவர் எந்த சந்தர்ப்பத்திலும் சிறுநீரை மனித நுகர்வுக்கு பரிந்துரைக்க முடியாது என்று திட்டவட்டமாகக் கூறியுள்ளார். "உள்ளூர் பால் பண்ணைகளில் இருந்து சாஹிவால், தார்பார்கர் மற்றும் விந்தவானி (கலப்பினம்) ஆகிய மூன்று வகையான மாடுகளின் சிறுநீர் மாதிரிகள் மற்றும் எருமைகள் மற்றும் மனிதர்களின் சிறுநீர் மாதிரிகளைச் சேகரித்தோம். ஜூன் மற்றும் நவம்பர் 2022 க்கு இடையில் மேற்கொள்ளப்பட்ட எங்கள் ஆய்வில், வெளிப்படையாக ஆரோக்கியமான நபர்களின் சிறுநீரிலும் கணிசமான அளவுக்கு நோய்க்கிருமி பாக்டீரியாக்கள் இருப்பது தெரிந்தது." என போஜ் ராஜ் சொல்கிறார்.

"காய்ச்சி வடிகட்டிய சிறுநீரில் தொற்று பாக்டீரியாக்கள் இல்லை என்று சிலர் வாதிடுகின்றனர். நாங்கள் அதை மேலும் ஆய்வு செய்து வருகிறோம்," என்றும் அவர் கூறுகிறார்.

குறிப்பிடத்தக்க வகையில், இந்தியச் சந்தையில் பசுவின் சிறுநீர் பரவலாக விற்கப்படுகிறது. அதில் இந்தியாவின் உணவுப் பாதுகாப்பு மற்றும் தரநிர்ணய ஆணையத்தின் FSSAI) வர்த்தக முத்திரையும் இருப்பதில்லை.

இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனத்தின் முன்னாள் இயக்குனர் ஆர். எஸ். சவுகான் பசுவின் சிறுநீர் கொரோனா வைரஸுக்கு எதிராக செயல்படக்கூடியது என்று சொல்கிறார்.  “நான் 25 ஆண்டுகளாக பசுவின் சிறுநீரை ஆராய்ச்சி செய்து வருகிறேன், காய்ச்சி வடிகட்டிய மாட்டு சிறுநீர் மனிதர்களின் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துகிறது. புற்றுநோய் மற்றும் கோவிட் தொற்றுக்கு எதிராகவும் உதவுகிறது என்பதை நாங்கள் கண்டறிந்துள்ளோம். இந்தக் குறிப்பிட்ட ஆராய்ச்சி காய்ச்சி வடிகட்டிய சிறுநீர் மாதிரிகளில் செய்யப்படவில்லை. காய்ச்சி வடிகட்டிய கோமியத்தையே உட்கொள்ள பரிந்துரைக்கிறோம்" என்று சவுகான் தெரிவிக்கிறார்.

Follow Us:
Download App:
  • android
  • ios