இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 9,996 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதையடுத்து புதிய உச்சத்தை எட்டியுள்ளது. இதனால், தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 2.86 லட்சம் ஆக அதிகரித்துள்ளது. 

இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு, பொதுவெளியில் மக்கள் நடமாட்டம் அதிகரித்திருப்பதாலும், பரிசோதனைகளை அதிகரிப்பதாலும் பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து உயர்கிறது. அதேசமயம் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருவது ஆறுதல் அளிப்பதாக உள்ளது.

இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில்;- கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா வைரசால் புதிதாக 9,996 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,86,579ஆக அதிகரித்துள்ளது. அதில்,1,37,448 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 1, 41,029 பேர் சிகிச்சைக்கு பின் வீடு திரும்பியுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கொரோனா வைரசால் 357 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8 ,102ஆக அதிகரித்துள்ளது. 

அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 94,041 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து 44,517 பேர் குணமடைந்துள்ள நிலையில், 3,438 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் 36,841 பேருக்கும், டெல்லியில் 32,810 பேருக்கும், குஜராத்தில் 21,521 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.