இந்தியாவில் கொரோனா வைரஸ் சமூக பரவலாக மாறிவிட்டது என இந்திய மருத்துவர் சங்கம் தெரிவித்துள்ளது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிரித்துக் கொண்டே வருகிறது. மகாராஷ்டிரா, தமிழ்நாடு, டெல்லி ஆகிய மூன்று மாநிலங்களில் தான் பாதிப்பு அதிகரித்து வந்த நிலையில் கடந்த சில நாட்களாக கர்நாடகா, ஆந்திராவிலும் தற்போது பாதிப்பு உயர்ந்து கொண்டே இருக்கிறது. இந்நிலையில் கடந்த 24 மணிநேரத்தில் புதிய உச்சமாக  38,902 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதையடுத்து மொத்த பாதிப்பு எண்ணிக்கை  10,77, 618 பேர் உயர்ந்துள்ளது. நாள்தொறும் பாதிப்பு 30 ஆயிரத்தை தாண்டி வருகிறது. அதேபோல், மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 26,816 ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில், கொரோனா வைரஸ் சமூக பரவலாக மாறுவது தொடங்கியுள்ளது என ஐ.எம்.ஏ., எனப்படும், இந்திய மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து, ஐ.எம்.ஏ., தலைவர் டாக்டர் வி.கே. மோங்கா கூறியதாவது: தினமும், கொரோனா வைரசால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை, 30 ஆயிரத்தை கடந்து பதிவாகிறது. இது, மிகவும் மோசமான நிலையாகும். 

நகரங்களில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முடிந்து அதே நேரத்தில் புதிய நோய் பரவல் மண்டலங்களாக  கிராமங்கள் உருவாகிவிட்டால் அதிலிருந்து மீள்வது மிகவும் சிரமமாகிவிடும் என்று அவர் எச்சரித்துள்ளார். எனவே  மாநில அரசுகள் கொரோனா தடுப்பு பரவல் நடவடிக்கையில் தீவிரம் காட்ட வேண்டும் என்றும், அதற்காக மத்திய  அரசின் உதவியை நாடலாம் என்றும் மோங்கா வலியுறுத்தியுள்ளார். ஐ.எம்.ஏ.,வின் இந்த அறிக்கை, முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.