கொரோனா தொற்றால் இஸ்லாமியர்கள் உயிரிழப்பவர்கள் தியாகிகள் என அகில இந்திய முஸ்லிம் மஜ்லீஸ் கட்சி தலைவர் அசாதுதீன் ஓவைசி தெரிவித்துள்ளார். 

டெல்லி நிஜாமுதீனில் கடந்த மார்ச் 8-ம் தேதி முதல் 20-ம் தேதி வரை மாநாடு ஒன்று நடைபெற்றது.  இதில் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் மற்றும் மலேசியா, இங்கிலாந்து, சவுதி அரேபியா, ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் இருந்தும் சுமார் 1,700 பேர் கலந்து கொண்டனர்.

 இதன்பின்பு அவர்களில் பலர் தங்கள் ஊருக்கு திரும்பி சென்றனர்.  இந்நிலையில், தெலுங்கானாவில் மாநாட்டுக்கு சென்று வந்த 9 பேர் கொரோனா வைரஸ் தாக்குதல் காரணமாக திடீரென உயிரிழந்தனர். இதனையடுத்து, மாநாடு என்ற அனைத்து இஸ்லாமியர்களுக்கும் பரிசோதனை செய்யப்பட்டது. இதில், பெரும்பாலானோர் கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், தெலுங்கானாவில் 229 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 9 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், இதுதொடர்பாக அசாதுதீன் ஓவைசி டுவிட்டர் பக்கத்தில்;- கொரோனா வைரஸ் நோய்த்தொற்றால் உயிரிழப்பவர்கள் இஸ்லாமிய மதத்தில் தியாகிகள் அந்தஸ்தை பெறுகிறார்கள். தியாகிகளின் சடலத்தை அடக்கம் செய்வதற்கு முன்பு குளிக்க வைப்பதோ, மேலே கவசமாக ஆடை போட்டு விடவோ தேவையில்லை. இதுபோன்ற தியாகிகள் அடக்கம் செய்யும்போது இறந்தவர்களுக்காக சிறப்பு தொழுகையை தாமதமின்றி நடத்தி சிலரது முன்னிலையில் உடனடியாக அடக்கம் செய்திவிட வேண்டும் என்று பதிவிட்டுள்ளார்.

கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் குடும்ப உறுப்பினர்கள் சடலத்தை அகற்றுவதில் கடுமையான கட்டுப்பாடுகள் கடைப்பிடிக்கட்டப்பட்டு வரும் நிலையில் இவரது டுவிட்டர் பதிவு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.