மகாராஷ்டிராவில் முதல்வர் உத்தவ் தாக்கரே இல்லத்திற்கு அருகில் உள்ள டீ கடைக்காரருக்கு கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து அவரின் இல்லத்திற்கு அதிரடியாக சீல் வைக்கப்பட்டுள்ளது. 

சீனாவில் முதன் முதலில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ், தற்போது 198 நாடுகளுக்குமேல் பரவி, உலக அளவில் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், கொரோனா தடுப்பு நடவடிக்கையாக இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. அப்படி இருந்த போதிலும் கொரோனா தொற்று நாளுக்குநாள் வேகம் எடுத்து வருகிறது. இதுவரை இந்தியாவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4200-ஐ தாண்டியுள்ளது. உயிரிழப்பு எண்ணிக்கை 111ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் அதிகபட்சமாக கொரோனா பாதிக்கப்பட்ட மாநிலத்தில் மகாராஷ்டிரா முதலிடத்திலும், அடுத்த இடத்தில் தமிழ்நாடும் உள்ளது. 

இந்நிலையில், மகாராஷ்டிராவில் முதல்வர் உத்தவ் தாக்கரே இல்லம் புறநகர் பகுதியான பந்த்ராவில் மாதோஸ்ரீ பகுதியில் உள்ளது. இங்கு தனது குடும்பத்தினருடன்  உத்தவ் தாக்கரே வசித்து வருகிறார்.  இப்பகுதியில் உள்ள ஒரு டீக்கடைக்கடைக்காருக்கு கொரோனா தொற்று பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து, முதல்வர் தாக்கரே இல்லம் மற்றும் அப்பகுதி முழுவதையும் சுகாதார அதிகாரிகள்  சீல் வைத்துள்ளனர்.