அறிகுறியே இல்லாமல் 186 பேருக்கு கொரோனா உறுதியான விவகாரம் கவலையளிக்கிறது என முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கவலை தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸின் பரவல் இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுவரை கொரோனாவுக்கு 15,000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். தலைநகர் டெல்லியைப் பொறுத்தவரை அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,893 ஆகவும், உயிரிழந்தோர் எண்ணிக்கை 43 ஆகவும் அதிகரித்துள்ளது. 

ஆனால், டெல்லியைப் பொறுத்தவரை கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால், தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகள் 76 ஆக உயர்ந்துள்ளது. இந்த சூழலில் நாளை முதல் கொரோனா தாக்கம் குறைந்த இடங்களில் விதிமுறைகளைத் தளர்த்தலாம் என மத்திய அரசு தெரிவித்திருந்தது. இதைப் பின்பற்றி பல்வேறு மாநிலங்கள் கொரோனா பாதிக்காத பகுதிகளை அடையாளம் கண்டு வருகின்றன. இது தொடர்பாக அதிகாரிகளுடன் முதல்வர் கெஜ்ரிவால் ஆலோசனை நடத்தினர்.

பின்னர், செய்தியாளர்களை சந்தித்த டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மக்களின் பாதுகாப்பே முக்கியம் என்பதால் ஊரடங்கில் தளர்த்த முடியாது என அவர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். 76 இடங்கள் கொரோனா ஹாட்ஸ்பாட் பகுதிகளாக இருப்பதால், டெல்லியில் ஊரடங்கு தளர்வுக்கு வாய்ப்பில்லை. ஊரடங்கு தளர்வு பற்றி ஏப்ரல் 27 மீண்டும் ஆலோசனை நடத்தப்படும் என தகவல் தெரிவித்துள்ளார். 

டெல்லியில் புதிதாக கொரோனா உறுதியான 186 பேரும் எந்த அறிகுறியும் இல்லாமல் இருந்துள்ளனர். அறிகுறியே இல்லாமல் 186 பேருக்கு கொரோனா உறுதியான விவகாரம் கவலையளிக்கிறது. டெல்லியில் தொடர்ந்து கொரோனா பரவினாலும் கட்டுக்குள் உள்ளது. இதனால் யாரும் அச்சமடைய தேவையில்லை என்று கூறியுள்ளார்.