டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட  மருத்துவரின் மனைவிக்கு நோய்த்தொற்று இன்றி குழந்தை பிறந்துள்ளதாக மருத்துவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். 

சீனாவின் பிறப்பிடமான கொரோனா வைரஸ் உலக நாடுகளுக்கு பெரும் சவாலாக இருந்து வருகிறது. அமெரிக்கா உள்ளிட்ட வல்லரசு நாடுகளை அலறவிட்டு வருகிறது.  இதுவரை இத்தாலி, ஸ்பெயின், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளிலும் நாளுக்கு நாள் உயிரிழப்பு அதிகரித்துக்கொண்டே செல்கிறது.  இந்நிலையில், இந்த வைரஸ் தொற்றை ஆரம்பித்திலேயே கிள்ளி எறிவதற்காக மத்திய, மாநில அரசுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வந்தனர்.

இதனால், இந்தியா முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வந்தது. இதுவரை 3000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 70க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 184 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 

இந்நிலையில், டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில், உளவியல் துறையில் மருத்துவராக பணிபுரிந்தவருக்கு , கடந்த சில நாட்களுக்கு முன்னர், கொரோனா தொற்று உறுதியானது. இதனையடுத்து அவர் தனி வார்டில் அனுமதிக்கப்பட்டார். 9 மாதம் கர்ப்பிணியான அவரது மனைவிக்கும் கொரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் தெரியவந்தது. அவரும் தனிமைபடுத்தப்பட்டதுடன், அவரை மருத்துவர்கள் தீவிரமாக கண்காணித்து வந்தனர்.

இந்நிலையில், அவருக்கு சிசேரியன் முறையில் ஆண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு கொரோனா தொற்று இல்லை என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்தியாவில், கொரோனா பாதித்த தம்பதிக்கு ஆரோக்கியமாக குழந்தை பிறப்பது இதுவே முதல்முறையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.