கேரளாவைச் சேர்ந்த புது மாப்பிள்ளை சவுதி அரேபியாவில் கொரோனா வைரஸ் பாதித்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

கேரள மாநிலம் கண்ணூர் அருகே பானூர் பகுதியை சேர்ந்தவர் மம்மு. இவரது மகன் ஷப்னால் (28). சவுதி அரேபியாவில் உள்ள மெதினாவில் பணி புரிந்து வந்தார்.  இவருக்கு கடந்த ஜனவரி 5ம் தேதி திருமணம் நடந்தது. இதற்காக ஊருக்கு வந்தவர். மார்ச் 3ம் தேதி மீண்டும் சென்றார். அங்கு அவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தவர் சிகிச்சை பலன் அளிக்காமல் அங்கேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து அவரது உடல் சவுதி அரேபியாவிலேயே அடக்கம் செய்யப்பட்டது. 

 அதேபோல இடுக்கி மாவட்டம் தொடுபுழாவை சேர்ந்தவர் தங்கச்சன்(51) நியூயார்க் பெருநகர போக்குவரத்து துறை அதிகாரியாக பணியாற்றி வந்தார். கடந்த சில தினங்களுக்கு முன்பு கொரோனா பாதிப்புக்கு உள்ளானார். 2 தினங்களுக்கு முன் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இதையடுத்து அமெரிக்காவில் மட்டும் மரணமடைந்த கேரளாவைச் சேர்ந்தவர்களின் எண்ணிக்கை 3ஆக உயர்ந்துள்ளது.

இதையடுத்து வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களில் கொரோனால் பாதிக்கப்பட்டு இறந்த கேரளத்தைச் சேர்ந்தவர்களின் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது. அமெரிக்காவில் 3 பேர், பிரிட்டன் துபாய் சவுதி அரேபியா தலா ஒருவர் என 4 பேர் இறந்துள்ளது குறிப்பிடத்தக்கது.