ஊரடங்கு காலத்தில் மருத்துவர்களின் பரிந்துரைப்படி மது வழங்கலாம் என்ற முதல்வர் பினராயி விஜயன் உத்தரவுக்கு கேரளா உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.

கொரோனா வைரஸை கட்டுப்படுத்த நாடு முழுவதும் 21 நாள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய பொருட்களுக்கு தேவையான கடைகள் மட்டுமே குறிப்பிட்ட நேரங்களில் திறக்க அனுமதிக்கப்பட்டு உள்ளது. மற்ற அனைத்து கடைகளும், வணிக நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளன. போக்குவரத்து முற்றிலும் முடக்கப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் மதுக்கடைகளும் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில், கேரளாவில் மது அருந்த முடியாமல் 6 பேர் தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவர்களில் பெரும்பாலானவர்கள் உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் பாதிக்கப்பட்டு வந்தனர். 

இந்நிலையில், முதல்வர் பினராயி விஜயன் ஊரடங்கின் காரணமாக, மது கிடைக்காமல் விரக்தி அடைந்த பலரும், தற்கொலை முயற்சியில் இறங்குகின்றனர். அவர்களுக்கு மட்டும், பரிந்துரைக்கப்பட்ட அளவில் மது கிடைக்க, வழிவகை செய்யப்படுகிறது. மது கிடைக்காமல் பாதிக்கப்பட்டோர், அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு செல்ல வேண்டும். நடவடிக்கை குறிப்பிட்ட அளவில் மது வழங்கலாம்' என, டாக்டர் அளிக்கும் சான்றிதழ் மற்றும் அரசு அடையாள அட்டையை, கலால்துறை அலுவலகத்தில் வழங்க வேண்டும். கலால் அதிகாரிகள் கொடுக்கும் மதுவுக்கான அனுமதி சீட்டை, குடிபொருள் கூட்டுறவு அலுவலக நிர்வாக இயக்குனரிடம் வழங்கினால், அவர்களுக்கு மது வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். 

இந்நிலையில், அரசின் உத்தரவை எதிர்த்து கேரளா உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஊரடங்கு காலத்தில் மருத்துவர்களின் பரிந்துரைப்படி மது வழங்கலாம் என்ற கேரள அரசின் உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்து வழக்கை ஒத்திவைத்தது.