Asianet News TamilAsianet News Tamil

கொரோனாவில் சிக்கிய வி.வி.ஜ.பிக்கள்.. ஒரே நாளில் இரண்டு முதலமைச்சருக்கு கொரோனா.. மத்திய அமைச்சரும் பாதிப்பு..

மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிற்கு இன்று கொரோனா உறுதியாகியிருந்த நிலையில், தற்போது பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் மற்றும் கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை ஆகியோருக்கும் தொற்று உறுதியாகியுள்ளது.
 

Corona to two chief ministers on the same day
Author
India, First Published Jan 10, 2022, 9:41 PM IST

மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிற்கு இன்று கொரோனா உறுதியாகியிருந்த நிலையில், தற்போது பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் மற்றும் கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை ஆகியோருக்கும் தொற்று உறுதியாகியுள்ளது.

பிகார் முதலமைச்சர் நிதிஷ் குமாருக்கு கொரோனா பரிசோதனையில் பாசிட்டிவ் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மருத்துவர்களின் ஆலோசனையின்பேரில் அவர் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். மக்கள் அனைவரும் கோவிட் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளதாக டிவிட்டரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை தெரிவித்திருக்கும் தகவலில், “நான் லேசான அறிகுறிகளுடன் கொரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளேன். என்னுடைய உடல்நலன் சீராக உள்ளது. இப்போது நான் வீட்டுத்தனிமையில் உள்ளேன். கடந்த தினங்களில் என்னுடன் தொடர்பிலிருந்தவர்கள் அனைவரும் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டு, கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார். முன்னதாக கொரோனா உறுதிசெய்யபப்ட்ட அமைச்சர் ராஜ்நாத் சிங்கும் வீட்டில் தன்னை தனிமைப்படுத்திக்கொள்வதாகவே அறிவித்திருந்தார்.

இந்தியாவில் கொரோனா தொற்று பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணிநேரத்தில் 1.79 லட்சம் பேர் கொரோனாவில் பாதிக்கப்பட்டுள்ளனர். நாட்டில்  ஒமைக்ரான் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும்  4 ஆயிரத்தைக் கடந்துள்ளது. இது குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில், இந்தியாவில் ஒட்டுமொத்த பாதிப்பு 3 கோடியே 57 லட்சத்து 7 ஆயிரத்து 727ஆக அதிகரி்த்துள்ளது. நாட்டில் முதல்முறையாக கடந்த 227 நாட்களுக்குப்பின் ஒரேநாளில் 1.79 லட்சம் பேர் கொரோனாவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கையும் கடந்த 197 நாட்களில் இல்லாத அளவாக 7 லட்சத்து 23 ஆயிரத்து 619 ஆக அதிகரித்து, 2.03 சதவீதமாக உயர்ந்துள்ளது. ஒரே நாளில் கொரோனாவிற்கு 146 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் நாட்டில் ஒட்டுமொத்த உயிரிழப்பு 4 லட்சத்து 83 ஆயிரத்து 936 ஆகஅதிகரித்துள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios