கொரோனா வைரஸ் பாதிப்பு நாடு முழுவதும் சற்று அதிகரித்து வரும் நிலையில் பாட்டியாலா தேசிய சட்டப்பல்கலைக்கழகத்தில் 60 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக மக்கள் மிகுந்த பாதிப்பு அடைந்தனர். சொந்தங்களை இழந்தும், வாழ்வாதாரம் இல்லாமலும் பாதிக்கப்பட்டனர். இதனையடுத்து இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு தற்போது தான் இயல்பு நிலை திரும்பிய நிலையில் மீண்டும் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது. டெல்லி,மஹாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் படிப்படியாக தொடங்கிய கொரோனா நாடு முழுவதும் பரவி வருகிறது. இதன் காரணமாக அந்த அந்த மாநில அரசுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. தமிழகத்திலும் சென்னை ஐஐடியில் 200க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா பரவி உள்ளது. இதனை கட்டுப்படுத்த சுகாதாரத்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.

மாணவர்களை பாதித்த கொரோனா
இந்தநிலையில் பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவின் தேசிய சட்டப்பல்கலைக்கழகம் உள்ளது. இந்த பல்கலைக்கழகத்தில் ஆயிரக்கனக்கான மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த மாணவர்களில் ஒரு சில மாணவர்களுக்கு கொரோனா தொற்கு உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து மற்ற மாணவர்களுக்கும் சோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் 60 மாணவர்களுக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளது தற்போது தெரியவந்துள்ளது. லேசான அறிகுறிகளோடு உள்ள மாணவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனையடுத்து பாட்டியாலா சட்டப்பல்கலைக்கழகம் கட்டுப்பாட்டு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து வரும் 10 ஆம் தேதிக்குள் கல்லூரி விடுதிகளை காலி செய்யுமாறு கல்லூரி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. வரும் நாட்களில் மேலும் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
