உலகம் முழுவதும் கோர தாண்டவம் ஆடி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுவரையிலும் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவவர்களின் எண்ணிக்கை 727 ஆக அதிகரித்துள்ளது. இதனிடையே ராஜஸ்தான் மாநிலத்தில் முதல் கொரோனா பலி நிகழ்ந்துள்ளது. பில்வாரா பகுதியில் கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மருத்துவமனையில்தனிமை சிகிச்சை பெற்றுவந்த நபர் நேற்று மரணமடைந்தார்.

இதையடுத்து இந்தியாவில் பலி எண்ணிக்கை 17 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதை தடுக்க மக்கள் சமூக விலகலை கடைபிடிக்கும் வகையில் நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. கல்வி நிறுவனங்கள், கடைகள், வணிக வளாகங்கள், தனியார் நிறுவங்கள், பொது போக்குவரத்துகள் அனைத்தும் அடைக்கப்பட்டுள்ளன. அடுத்து வரும் சில வாரங்களுக்கு மக்கள் வீடுகளிலேயே முடங்கி இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இந்தநிலையில் உலக அளவிலும் கொரோனா பலி தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தற்போதைய நிலவரப்படி 25 ஆயிரத்தை கொரோனா பலி நெருங்கி கொண்டிருக்கிறது. 5 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தனிமை சிகிச்சையில் வைக்கப்பட்டுள்ளனர். நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா வைரஸை கட்டுக்குள் கொண்டு வர முடியாமல் உலக நாடுகள் திணறி வருகின்றன.