கொரோனா பாதிப்பு இந்தியாவில் 7600ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 249 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். கொரோனாவை தடுக்கும் விதமாக ஏற்கனவே வரும் 14ம் தேதி வரை ஊரடங்கு அமலில் இருக்கிறது. 

ஆனாலும் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்துவரும் நிலையில், ஊரடங்கை நீட்டிக்க வேண்டிய அவசியம் உள்ளது. ஊரடங்கு நீட்டிப்பு குறித்து இன்று காலை, பிரதமர் மோடி, அனைத்து மாநில முதல்வர்களுடனும் ஆலோசனை நடத்தினார். அப்போது அனைத்து மாநில முதல்வர்களுமே ஊரடங்கை நீட்டிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். எனவே தேசிய அளவில் ஊரடங்கு நீட்டிக்கப்படுவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. 

ஆனால், மத்திய அரசு அறிவிப்பதற்கு முன்பாகவே, ஒடிசா, பஞ்சாப் ஆகிய மாநிலங்கள் ஏற்கனவே ஊரடங்கை நீட்டித்துவிட்டன. ஒடிசாவில் ஏப்ரல் 30ம் தேதி ஊரடங்கை நீட்டித்து அம்மாநில முதல்வர் நவீன் பட்நாயக் உத்தரவிட்டிருந்த நிலையில், நேற்று பஞ்சாப்பில் ஊரடங்கு நீட்டிப்பு உறுதி செய்யப்பட்டது. மே ஒன்றாம் தேதி வரை பஞ்சாப்பில் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், இந்தியாவில் கொரோனாவால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள மகாராஷ்டிரா மாநிலத்திலும் ஏப்ரல் 30ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே ஊரடங்கை ஏப்ரல் 30 வரை நீட்டித்து உத்தரவிட்டுள்ளார். மகாராஷ்டிராவில் அதிகபட்சமாக 1666 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 110 பேர் உயிரிழந்துள்ளனர்.

தமிழ்நாட்டில் ஊரடங்கு நீட்டிப்பு குறித்து அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டுவருகிறது. முதல்வர் பழனிசாமி, அமைச்சர்களுடன் ஆலோசித்துவருகிறார்.