கொரோனாவின் தாக்கமும் பலி எண்ணிக்கையும் உலகம் முழுதும் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. உலகம் முழுதும் 4 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 21 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். ஒரு லட்சத்து 11 ஆயிரம் பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர்.

கொரோனா உருவான சீனாவை விட இத்தாலி, ஸ்பெய்னில் கொரோனாவிற்கு பலியானோரின் எண்ணிக்கை அதிகமாகவுள்ளது. இத்தாலியில் 7 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனாவிற்கு பலியாகியுள்ள நிலையில், ஸ்பெய்னில் பலி எண்ணிக்கை 4 ஆயிரத்தை நெருங்குகிறது. 

இந்தியாவில் மத்திய, மாநில அரசுகளால் மேற்கொள்ளப்பட்ட அதிரடியான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் கொரோனாவின் பாதிப்பு மேற்கண்ட நாடுகள் அளவிற்கு இல்லை. ஆனாலும் தினம் தினம் கொரோனாவின் பாதிப்பு அதிகரித்து கொண்டே தான் இருக்கிறது. நேற்று இரவு நிலவரப்படி, 606 ஆக இருந்த கொரோனா பாதிப்பு, சமீபத்திய தகவலின் படி, 652ஆக உயர்ந்துள்ளது. 

மகாராஷ்டிராவில் அதிகபட்சமாக 124 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டில் 23ஆக இருந்த கொரோனா பாதிப்பு, 26ஆக அதிகரித்துள்ளது. குஜராத், மத்திய பிரதேச மாநிலங்களிலும் கொரோனா பாதிப்பு அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. புதிதாக யாருக்கும் கொரோனா பரவாத நிலையில், ஏற்கனவே டெஸ்ட் செய்யப்பட்டவர்களின் முடிவு வர வர, பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து கொண்டிருக்கிறது. 

பலி எண்ணிக்கையும் இந்தியாவில் 14ஆக அதிகரித்துள்ளது. குஜராத் மற்றும் ஜம்மு காஷ்மீரில் தலா ஒருவர் உயிரிழந்த நிலையில், பலி எண்ணிக்கை 14ஆக அதிகரித்துள்ளது. மும்பையில் நேற்று முன் தினம் இறந்த ஒருவருக்கும் கொரோனா இருந்தது தெரியவந்துள்ளது. அதனால் பலி எண்ணிக்கை 14 ஆக உள்ளது.

ஏப்ரல் 14ம் தேதி வரை நாடு தழுவிய ஊரடங்கு அமலில் உள்ளதால், சமூக பரவல் தடுக்கப்பட்டுள்ளது.