சீனாவில் உருவான கொரோனா வைரஸின் தாக்கம் இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்துவரும் நிலையில், இந்தியாவில் மொத்தமாக 572 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 11 பேர் கொரோனாவிற்கு பலியாகியுள்ளனர்.

இந்தியாவில் மகாராஷ்டிரா மற்றும் கேரளா ஆகிய மாநிலங்கள் கொரோனாவால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் கொரோனாவால் 18 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் இங்கு பாதிப்பு அதிகமாக இல்லை. 

ஆனால் நமது அண்டை மாநிலங்களான கர்நாடகா மற்றும் கேரளா ஆகிய 2 மாநிலங்களிலுமே கொரோனாவின் பாதிப்பு அதிகமாக இருக்கிறது. அதனால் முன்னெச்சரிக்கையாக, அந்த மாநிலங்களில் இருந்து வரும் அத்தியாவசிய பொருட்களை ஏற்றிவரும் வாகனங்களை தவிர மற்ற வாகனங்களுக்கு ஏற்கனவே தடை விதிக்கப்பட்டது.

கேரளாவில் கொரோனாவின் தாக்கம் ஜெட் வேகத்தில் போய்க்கொண்டிருக்கும் நிலையில், கர்நாடகாவிலும் கொரோனா பாதிப்பு அதிகமாகியுள்ளது. 33 ஆக இருந்த கொரோனா பாதிப்பு, கர்நாடகாவில் ஒரே நாளில் 9 அதிகரித்து 42ஆக உயர்ந்துள்ளது. 

வெளிநாடுகளிலிருந்து திரும்பிய 9 பேருக்கு புதிதாக கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. கேரளாவின் காசர்கோட்டை சேர்ந்த இளைஞர், துபாயிலிருந்து வந்து மங்களூரு ஏர்போர்ட்டில் இறங்கினார். அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மற்றுமொரு கேரளாவை சேர்ந்தவரும் கர்நாடகாவில் வந்து இறங்கினார். அவருக்கும் கொரோனா தொற்று உள்ளது. அதேபோல, உத்தர கன்னடாவை சேர்ந்த இருவருக்கும் சிக்கபல்லபுரா மாவட்டத்தை சேர்ந்த இருவருக்கும் கொரோனா தொற்று உள்ளது உறுதிப்படுத்தப்பட்டது. 

எனவே புதிதாக 9 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டதால், கர்நாடகாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 42ஆக உயர்ந்துள்ளது. கர்நாடகாவில் மொத்தம் 14,910 பேர் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளனர். இத்தகவலை அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.