சீனாவில் உருவான கொரோனா வைரஸ், இத்தாலி, ஸ்பெய்ன், அமெரிக்கா ஆகிய நாடுகளில் பேரழிவை ஏற்படுத்திவருகிறது. சிறப்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளாலும் மக்களிடம் சரியான நேரத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தியதாலும், இந்தியாவில் பெரியளவிலான தாக்கத்தை கொரோனா ஏற்படுத்தவில்லை என்றாலும் கூட, தொடர்ச்சியாக கொரோனா பாதிப்பு அதிகரித்துக்கொண்டே வருகிறது. 

இந்தியாவில் மகாராஷ்டிரா, கேரளா ஆகிய 2 மாநிலங்களிலும் கொரோனாவின் தாக்கம் அதிகமாகவுள்ளது. கொரோனாவில் முதல் மாநிலமாக சதமடித்த மகாராஷ்டிராவில் இதுவரை மொத்தமாக 116 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கேரளாவும் சதத்தை நெருங்கிவிட்டது. கர்நாடகாவில் ஒரே நாளில் 9 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டதை அடுத்து எண்ணிக்கை 42ஆக உயர்ந்தது. 

ஆந்திரா, குஜராத், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களிலும் கொரோனா தீவிரமாக உள்ளது. தமிழகத்தில் மொத்தம் 18 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். மதுரையில் ஒருவர் கொரோனாவால் உயிரிழந்தார். இந்தியாவில் கொரோனாவிற்கு 11 பேர் பலியாகியுள்ளனர்.

கொரோனாவிலிருந்து தப்பிப்பதற்காக இன்று முதல் 21 நாட்களுக்கு பிரதமர் மோடி நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளார். எனவே நாடு முழுவதும் ஊரடங்கை பின்பற்றிவருகிறது. மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கியுள்ளனர். எனினும் தொடர்ந்து கொரோனாவின் பாதிப்பு அதிகரித்துவருகிறது. ஏற்கனவே கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்களுக்கான முடிவு வர வர எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. 

இன்று காலை 562லிருந்து 571ஆக உயர்ந்த கொரோனா பாதிப்பு, தற்போது 583ஐ எட்டிவிட்டது. கொரோனா பாதிப்பு 600ஐ நெருங்கியுள்ளது. அதனால் மக்கள் ஊரடங்கை சீரியஸாக பின்பற்ற வேண்டும்.