உலகம் முழுவதும் பெரும் பாதிப்புகளை உண்டாக்கி இருக்கும் கொடிய கொரோனா வைரஸ் நோய் இந்தியாவில் அசுர வேகம் எடுத்திருக்கிறது. இன்றைய நிலவரப்படி 29,435 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில் 934 பேர் பலியாகி இருக்கின்றனர். கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் மத்திய, மாநில அரசுகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இதனிடையே கடந்த மார்ச் மாதம் டெல்லியில் நடைபெற்ற தப்லீக் ஜமாத் மாநாட்டில் கலந்து கொண்ட பலருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டது நாடு முழுவதும் பெரும் பரபரப்பையும் சர்ச்சையையும் கிளப்பியது. இதையடுத்து அம்மாநாட்டிற்கு சென்று வந்தவர்கள் அனைவரையும் பரிசோதனை செய்து தனிமை சிகிச்சையில் வைக்க அரசு நடவடிக்கை எடுத்தது.

அவ்வாறு பாதிக்கப்பட்டு தனிமை சிகிச்சையில் வைக்கப்பட்டிருந்த பலர் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து மெல்ல மெல்ல மீண்டு குணம் பெற்றனர். இந்த நிலையில் தற்போது கொரோனா பாதித்து குணமடைந்த நபரிடமிருந்து பிளாஸ்மா சிகிச்சை மூலம் கொரோனா பாதிப்பிற்கு உள்ளாகி இருக்கும் நபருக்கு சிகிச்சை அளிக்கும் முறையை கடைபிடிக்க மருத்துவத் துறையினர் தொடங்கியிருக்கின்றனர். இதற்காக கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் ரத்தத்தில் இருக்கும் பிளாஸ்மா திரவம் திரட்டப்பட்டு வருகிறது. அண்மையில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பிளாஸ்மாவை தானம் வழங்க முன் வரும்படி பலருக்கு கோரிக்கை விடுத்திருந்தார். இது தொடர்பாக தப்லீக் ஜமாத்தின் தலைவர் மவுலானா முகமது சாதும் அனைத்து ஜமாத்தார்களும் தங்கள் பிளாஸ்மாவை வழங்கி நோயாளிகளின் உயிர் காக்க உதவவேண்டும் என்று கூறியிருந்தார். அதன்படி டெல்லி தப்லீக் ஜமாத் மாநாட்டில் கலந்து கொண்டவர்களில் சுமார் 300 பேர் தற்போது எந்த வித வேறுபாடுகளும் இன்றி கொரோனா சிகிச்சைக்காக தங்கள் பிளாஸ்மாவை வழங்க முன்வந்திருப்பதாக தகவல் வந்திருக்கிறது.

தமிழகத்தில் அதிகப்படியானவர்கள் கொரோனாவில் இருந்து மீண்டிருக்கும் நிலையில் இங்கிருக்கும் பலரும் கொரோனா சிகிச்சைக்காக தங்கள் பிளாஸ்மாவை வழங்க விருப்பம் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக டெல்லி அரசு மருத்துவமனை வட்டாரம் கூறும் போது முதலில் சுல்தான் புதூரில் இருக்கும் கொரோனா முகாமைச் சேர்ந்த நான்கு ஜமாத்தினர் பிளாஸ்மாவை வழங்கினர். தற்போது மேலும் 300 ஜமாத்தினர் தங்கள் பிளாஸ்மாவை வழங்க முன்வந்து இருப்பதாகவும் ஒருவர் வழங்கும் பிளாஸ்மா மூலம் மூன்று பேரின் உயிரை காக்க முடியும் என்றும் கூறியுள்ளனர். கொரோனா பாதிப்பில் இருந்து சிகிச்சை பெற்று குணமடைந்தவர்களின் விபரங்களை சேகரித்து வைத்திருக்கும் டெல்லி அரசு அவர்களிடம் ஒப்புதல் பெறும் பணியை தொடங்கி இருக்கிறது.

பெருமை தரும் செய்தியாக தமிழகத்தைச் சேர்ந்த ஒருவரும் தனது பிளாஸ்மாவை வழங்கியிருக்கிறார். வேலூர் மாவட்டம் வாணியம்பாடியைச் சேர்ந்த பாஷா என்பவர் கொரோனாவில் இருந்து மீண்டு இருக்கும் நிலையில் தனது பிளாஸ்மாவை வழங்கி பிற நோயாளிகளுக்கு உதவி இருக்கிறார். பிளாஸ்மா சிகிச்சை மூலம் டெல்லி அரசு மருத்துவமனையில் கொரோனா பாதித்த ஒருவர் குணமடைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.