ஜார்கண்ட் மாநிலம் ஹண்டி மாவட்டத்தைச் சேர்ந்தவர் முண்டா பிர்சி (57 ). இவர் தனது வீட்டில் இருக்கும் சமயலறையில் சமையல் பணிகளில் ஈடுபட்டிருந்தார். குக்கரில் பருப்பை வேக வைத்துவிட்டு பிற பணிகளை பார்த்து வந்திருக்கிறார்.

அப்போது தனது வீட்டின் பின்புறம் இருக்கும் தோட்டத்திற்குச் சென்ற அவர் குக்கரில் பருப்பை வேக வைத்ததை மறந்ததாக தெரிகிறது. சுமார் 1 மணி நேரம் கழித்து குக்கர் வைத்த நினைவு வரவே, சமயலறைக்கு ஓடியிருக்கிறார்.

அடுப்பில் இருந்து குக்கரை கீழே இறக்கிய போது திடீரென்று குக்கரில் இருந்த விசில் பறந்து பிர்சியின் கண்ணிற்கும் மூளைப் பகுதிக்கு இடையே புகுந்து பலமாக தாக்கியது. இதனால் வலியால் அலறித் துடித்த அவரை உறவினர்கள் உடனடியாக மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

அங்கு அவரது தலையை ஸ்கேன் செய்து பார்த்த மருத்துவர்கள் பிர்சியின் கண்களைத் துளைத்த விசில் அவரது மூளைக்கு நடுவே இருப்பதை கண்டுபிடித்தனர். அறுவை சிகிச்சை மூலம் மூளையில் இருந்த விசில் பத்திரமாக மீட்கப்பட்டது. எனினும் அப்பெண்ணிற்கு இடக்கண் பார்வை பறிபோனது.

அறுவை சிகிச்சை மூலம் மூளையில் சிக்கியிருந்த விசிலை மீட்ட மருத்துவர்கள், அந்த பணி சற்று கடினமாக இருந்ததாக தெரிவித்தனர்.