ஒடிசா வளங்களை கொள்ளையடிக்கும் தமிழக ஒப்பந்தகாரர்கள்: ஸ்மிருதி இரானி பரபரப்பு குற்றச்சாட்டு!
ஒடிசாவின் வளங்களை தமிழ்நாட்டை சேர்ந்த ஒப்பந்தகாரர்கள் கொள்ளையடிப்பதாக மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி குற்றம் சாட்டியுள்ளார்
ஒடிசா வளங்களைக் கொள்ளையடிக்க தமிழகத்தில் உள்ளவர்கள் இடைவிடாது வேலை செய்து வருவதாகவும், ஒடிசா அரசை தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒப்பந்ததாரர்கள் கட்டுப்படுத்துகிறார்கள் எனவும் மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி குற்றம் சாட்டியுள்ளார்.
தமிழ்நாட்டை சேர்ந்த முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியும், முதல்வர் நவின் பட்நாயக்கின் முன்னாள் தனிச் செயலருமான வி.கே.பாண்டியன், ஆட்சி மற்றும் பிஜு ஜனதா தளம் கட்சி விவகாரங்களில் ஆதிக்கம் செலுத்துவதாக ஸ்மிருதி இரானி குற்றம் சாட்டியுள்ளார்.
நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. இதுவரை 6 கட்ட வாக்குப்பதிவு முடிந்த நிலையில், 8 மாநிலங்களில் உள்ள 57 தொகுதிகளுக்கு வருகிற ஜூன் மாதம் 1ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது.
அந்த வகையில், கடைசி கட்டமாக ஜூன் 1ஆம் தேதி தேர்தல் நடைபெறவிருக்கும் ஒடிசா மாநிலம் ஜகத்சிங்பூர், கேந்த்ராபாரா மற்றும் பாலசோர் ஆகிய மக்களவைத் தொகுதிகளில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டங்களில் கலந்து கொண்டு பேசிய ஸ்மிருதி இரானி, தமிழகத்தில் இருந்து ரிமோட் மூலம் கட்டுப்படுத்தப்படும் ஒடிசா மாநில அரசு, வெள்ளம் மற்றும் இயற்கை பேரிடர்களின் போதும், சூறாவளி தாக்கிய போதும் மாநிலத்துக்கு எதுவும் செய்யவில்லை என குற்றம் சாட்டினார்.
அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் அன்னதானம்: தமிழக வெற்றிக் கழகம் அறிவிப்பு!
“ஒடிசா அரசை தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒப்பந்ததாரர்கள் கட்டுப்படுத்துகிறார்கள். நரேந்திர மோடி அரசாங்கம் அனுப்பிய பணத்தை தமிழ்நாட்டை சேர்ந்த ஒப்பந்ததாரர்கள் கொள்ளையடித்தனர். . ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் குடிநீர் விநியோகத்திற்காக அனுப்பப்பட்ட நிதி தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒப்பந்ததாரர்களால் சூறையாடப்படுகிறது.” என ஸ்மிருதி இரானி குற்றம் சாட்டினார்.
பூரியில் உள்ள ஸ்ரீ ஜெகநாதர் கோயில் கருவூலத்தின் சாவி காணாமல் போனது தொடர்பான சர்ச்சை குறித்து பேசிய ஸ்மிருதி இரானி, மாநிலத்தில் பாஜக ஆட்சி அமைக்கும் போது குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள் என்றும் உறுதியளித்தார். மேலும், ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் அதிகாரிகள் கூட்டத்தால் சிறை வைக்கப்பட்டுள்ளார் எனவும், சுதந்திரமாக பேச முடியாதவர் எனவும் ஸ்மிருதி இரானி குற்றம் சாட்டினார்.