கர்நாடகாவில் நூலிழையில் ஆட்சியைத் தவறவிட்ட பாஜக, காங்கிரஸ்-மஜக கூட்டணி ஆட்சியைக் கவிழ்க்கும் முயற்சியைத் துரிதப்படுத்தியுள்ளது.

கர்நாடகாவில் காங்கிரஸ் - மஜக கூட்டணியைக் கவித்துவிட்டு பா.ஜ.க.வை அரியணையில் ஏற்ற அக்கட்சியின் தேசிய தலைவர்களே ஆர்வம் காட்டி வருகிறார்கள். நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாகவே இந்த முயற்சியில் வெற்றி பெற வேண்டும் என்று பகீரத பிரயத்தனம் செய்து வருகிறார்கள். இதற்காக காங்கிரஸ் - மகஜவில் அதிருப்தியில் உள்ள எம்.எல்.ஏ.க்களை இழுத்து ஆட்சியைக் கவிழ்க்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

 

இந்தத் தூண்டிலில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் ரமேஷ் ஜார்கிஹோளியை பாஜக தங்கள் வழிக்குக் கொண்டு வந்திருப்பதாக பெங்களூருவில் பரப்பரப்பு நிலவுகிறது. அண்மையில் அமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட இவர், கடந்த ஒரு வாரமாக யார் கண்ணிலும் படாமல் தலைமறைவாகிவிட்டார். அமைச்சர் பதவி பறிக்கப்பட்டதால், கடும் அதிருப்தியுள்ள இவர், அதிருப்தி எம்.எல்.ஏ.க்களை ஒருங்கிணைக்கு முயற்சியில் ஈடுபட்டுள்ளார். 

இவரைப்போலவே அமைச்சர் பதவி கிடைக்காமல் அதிருப்தியில் உள்ள 15 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை இவர் தன் வழிக்குக் கொண்டு வந்திருப்பதாகவும் பெங்களூரு தகவல்கள் கூறுகின்றன. அதிருப்தி எம்.எல்.ஏ.க்களுடன் பா.ஜ.க.வில் சேரவும் இவர் முயற்சி செய்து வருகிறார். இந்த முயற்சி வெற்றிபெற்றால், 15 எம்.எல்.ஏ.,க்கள் ஒரே நேரத்தில் ராஜினாமா செய்து அரசுக்கு நெருக்கடி ஏற்படுத்துவார்கள். 

இதனால் சபையில் காங்கிரஸ் - மஜகவின் கூட்டணி பெரும்பான்மையை இழக்கும் நிலை ஏற்படும். பாஜகவின் இந்த முயற்சியை முறியடிக்கும் முயற்சியில் காங்கிரஸ் கட்சியும் தீவிரமாக இறங்கியுள்ளது. அதிருப்தியில் உள்ள எம்.எல்.ஏ.க்களை சரிகட்டும் முயற்சியிலும் அக்கட்சி ஈடுபட்டுள்ளது.