கோவா மாநிலத்தில் காங்கிரஸ் சார்பில் சட்டமன்ற உறுப்பினர்களாக இருந்த 10 பேர், இந்த வாரத் தொடக்கத்தில் பாஜக-வுக்குத் தாவினர். இதில் 3 பேருக்கு இன்று அமைச்சர் பதவி கொடுக்கப்பட உள்ளது. முன்னாள் எதிர்க்கட்சித் தலைவரான சந்திரகாந்த் காவ்லேகர், இன்று துணை முதல்வராக பொறுப்பேற்பார் என்று சட்டசபை துணை சபாநாயகர் தெரிவித்துள்ளார். 

“ஜெனிஃபர் மொன்செராட்டே, ஃபிலிப்பி நேரி ரோட்ரிகஸ், லோபோ ஆகியோருக்கு அமைச்சர் பதவி கொடுக்கப்பட உள்ள ஆகியோருக்கு அமைச்சர் பதவி கொடுக்கப்பட உள்ளது” என்று துணை சபாநாயகர் கூறியுள்ளார். புதிய அமைச்சர்கள் இன்னும் சற்று நேரத்தில் பதவி ஏற்க உள்ளனர். 

பாஜக கூட்டணியிலிருந்த கோவா முற்போக்குக் கட்சியிலிருந்த மூன்று அமைச்சர் மற்றும் சுயேட்சை எம்.எல்.ஏ ரோகன் கவுந்தே ஆகியோர் வகித்து வந்த அமைச்சர் பதவிகளை ராஜினாமா செய்யச் சொன்னார் முதல்வர் பிரமோத் சாவந்த். இதற்கு கோவா முற்போக்குக் கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அவர்கள், ‘முதல்வர், எங்களை பதவி நீக்கம் செய்யட்டும். நாங்கள் ராஜினாமா செய்ய மாட்டோம்' என்று தெரிவித்துள்ளனர். 

கோவா மாநிலத்தில் மொத்தம் இருக்கும் சட்டமன்றத் தொகுதி 40. தற்போது அங்கு பாஜக-வுக்கு ஆதரவாக 27 பேர் உள்ளனர். 2017  ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ், தனிப் பெரும் கட்சியாக உருவெடுத்தது. ஆனால் தற்போது காங்கிரஸில் 5 எம்.எல்.ஏ-க்கள் மட்டுமே உள்ளனர். இந்நிலையில், கட்சியில் இணைந்துள்ள 10 எம்.எல்.ஏ-க்களும் அவர்கள் சொந்த விருப்பத்தின்படியே வந்தனர் என்று பாஜக கூறி வருகிறது. 

அதே நேரத்தில் மாநிலத்தில் இருக்கும் பாஜக தொண்டர்களுக்கு, இந்த முடிவு ஏற்புடையதாக இல்லை. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக உறுப்பினரான பிரனாவ் சன்வோர்டேர்கர், கட்சியிலிருந்து வெளியேறினார். அவர், “காங்கிரஸிலிருந்து 10 பேரை பாஜக-வில் இணைத்துக் கொண்டதும், அவர்களுக்கு அமைச்சர் பதவியை வழங்குவதும் சரியானது அல்ல. இது என்னை காயப்படுத்தியுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.  

கர்நாடகாவில் காங்கிரஸ் - மஜத தலைமையிலான கூட்டணியில் அமைந்திருக்கும் அரசு, தனது ஆட்சியைத் தக்கவைக்க போராடிக் கொண்டிருக்கும் நிலையில், கோவாவிலும் அரசியல் நாடகம் அரங்கேறி வருகிறது.