Congress targets Amit Shahs son again BJP says bid to tarnish image
பா.ஜனதா தலைவர் அமித் ஷா மகன் ஜெய் ஷா ஊழல் விவகாரத்தில் சி.பி.ஐ. அமைப்பு மூலம் சுதந்திரமாக விசாரணை நடத்த வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது.
ஊழல்
பா.ஜனதா தலைவர் அமித் ஷா மகன் ஜெய் ஷா நிறுவனம் ஒரே ஆண்டில் ரூ.80 கோடி விற்றுமுதல் ஈட்டியது தொடர்பாக ‘தி வயர்’ செய்தி இணைதளம் புலனாய்வு கட்டுரை வெளியிட்டு இருந்தது. நாடுமுழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த விவகாரம் தொடர்பாக காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சியின் தலைவர்கள் சி.பி.ஐ. விசாரணை கோரியுள்ளனர்.
ஆனால், இந்த குற்றச்சாட்டை பா.ஜனதா தலைவர் அமித் ஷா மகன் மறுத்துள்ளார். இவருக்கு ஆதரவாக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் கருத்து தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் செய்தித்தொடர்பாளர் பிரியங்கா சதுர்வேதி நேற்று டெல்லியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது-
வர்த்தகத்தை பெருக்க ரூ.15 கோடி கடனை இந்த முறையில்தான் வாங்க வேண்டும் என எங்களுக்கு பிரதமர் மோடி விளக்கி கூற வேண்டும். அவர் எங்களிடம் கூறுவது அவசியம்.
பா.ஜனதா அரசு பதவி ஏற்றதில் இருந்து எதிர்க்கட்சிகளின் குரலை ஒடுக்குவதற்காக சி.பி.ஐ. அமைப்பு, வருமான வரித்துறை, அமலாக்கப்பிரிவு ஆகியவற்றை பயன்படுத்தி வருகிறது. எதிர்க்கட்சிகளின் குரலை ஒடுக்க இந்த அமைப்புகள் கருவிகளாகப் பயன்பட்டு வருகின்றன. ஆனால், அமித் ஷா மகன் விவகாரத்தில் சி.பி.ஐ. அமைப்பை சுயமாகவும், சுதந்திரமாகவும் செயல்பட வேண்டும் இது முக்கியமான வழக்காகும்.
ஜெய் ஷா ஒரு தனிப்பட்ட வர்த்தகர் என்ற நோக்கில் பா.ஜனதா கட்சி பேசி வந்தது. அவர் அவரின் சொந்த வர்த்தகத்தை கவனித்து வருகிறார், அவரை யாரும் இலக்காக்கவில்லை. ஆனால், நரேந்திர மோடி அரசு ஒரு தனிப்பட்ட வர்த்தகரை பாதுகாக்க முயற்சிக்கிறது.
அரசின் வழக்கறிஞர் துஷார் மேத்தாவும் அமித் ஷாவின மகன் ஜெய் ஷாவுக்காக வாதாட உள்ளார். ஜெய் ஷா வழக்கில் ஆஜராக துஷார் மேத்தா அனுமதியும், விடுப்பும் கோரியுள்ளார்.
இது அரசு பதவியில் இருப்பவர், ஆதாயம் அடையும் விஷயத்தில் ஈடுபடுவது இல்லையா?
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
