Congress Taking 2G Judgement As A Badge Of Honour Says Arun Jaitley

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு ஊழல் வழக்கில் சிறப்பு நீதிமன்றம் அளித்த தீர்ப்பை நேர்மைக்கான சான்றாக காங்கிரஸ் கட்சியனர் எடுத்துக்கொள்ளக்கூடாது என்று மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார்.

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு ஊழல் வழக்கில், முன்னாள் தொலைதொடர்பு அமைச்சர் ஆ.ராசா மற்றும் திமுக எம்.பி., கனிமொழி உள்ளிட்ட அனைவரையும் விடுவித்து டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.

இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக எவ்விதமான குற்றச்சாட்டுமே நிரூபிக்கப்படவில்லை, போதுமான ஆதாரங்கள் இல்லை, அரசு தரப்பு வாதம் உற்சாகமாகத் தொடங்கி, தன்னம்பிக்கை இல்லாமல் முடிந்தது. குற்றஞ்சாட்டப்பட்ட 16 பேரும் வழக்கிலிருந்து விடுவிக்கப்படுகிறார்கள் என்று நீதிபதி ஓ.பி.சைனி தனது தீர்ப்பில் தெரிவித்தார்.

இந்த தீர்ப்பு குறித்து மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி விடுத்த அறிக்கையில் கூறியதாவது-

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு வழக்கு தொடர்பாக, சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பை காங்கிரஸ் கட்சியினர் நேர்மைக்கு சான்றாகவும், தங்களின் கொள்கைக்கு கிடைத்த சான்றாகவும் நினைக்கிறார்கள். காங்கிரஸ் அவ்வாறு எடுத்துக் கொள்ளக்கூடாது. 2ஜி அலைக்கற்றை கொள்கை என்பது ஊழல்படிந்த, நேர்மையற்ற கொள்கை என்று ஏற்கனவே கடந்த 2012ம் ஆண்டில் உச்ச நீதிமன்றம் தெரிவித்துவிட்டது.

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு கொள்கை என்பது, தன்னிச்சையானது,நியாயற்றது. ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீட்டின் ஒவ்வொன்றையும் உச்ச நீதிமன்றம் கடந்த 2012ல் ரத்து செய்தது. 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டு கொள்கையால், அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. புதிதாக ஒரு கொள்கையை அரசு உருவாக்கி, புதியதாக ஏலம் விட வேண்டும் என நீதிமன்றம் தெரிவித்து இருந்தது இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.