ஜனாதிபதி தேர்தல் என்பது, குறுகிய நோக்கம், வகுப்புவாதம், பிரித்தாள்வது ஆகியவற்றுக்கு எதிரானது என்று காங்கிரஸ்கட்சியின் தலைவர் சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தலில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் வேட்பாளர் மீரா குமார், துணை ஜனாதிபதி வேட்பாளர் கோபால கிருஷ்ண காந்தி , மற்றும் எதிர்க்கட்சிகளின் கூட்டம் டெல்லியில் நேற்று நடந்தது. இதில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசுகையில், “ இந்த ஜனாதிபதி தேர்தலில் வாக்குகள் நமக்கு எதிராக இருக்கலாம். வெற்றி வாய்ப்பை தராமல் இருக்கலாம். ஆனால், நாம் கடுமையான போட்டியைக் கொடுக்க வேண்டும்.

குறுகிய மனப்பான்மை, பிரித்தாள்வது, மற்றும் வகுப்புவாத பார்வை கொண்டவர்களின் புகலிடமாக இந்தியா இருந்துவிடக்கூடாது. அதற்கு அனுமதிக்க கூடாது. நாம் மிகுந்த விழிப்புணர்வாக இருந்த நாம் யாரென்று வௌிப்படுத்த வேண்டும். நமது சுதந்திரத்துக்காக கடுமையாகப் போராட வேண்டும். நமக்கு என்ன எதிர்காலம் வேண்டுமோ அதை உருவாக்க வேண்டும். நமது பாரம்பரிய மதிப்புகள் மீது நம்பிக்கை வைக்க வேண்டும். அதை நம்ப வேண்டும்.

சிந்தாந்தங்களுக்கும், மதிப்புகளுக்கும் இடையிலான போட்டியாக ஜனாதிபதி தேர்தல் இருக்கிறது. மனசாட்சிக்கு உட்பட்டு இந்த தேர்தலில் வாக்களிப்போர் வாக்களித்து இந்தியாவையும், மகாத்மா காந்தியையும், சுதந்திரப் போராட்ட வீரர்களின் தியாகத்தையும் காக்க வேண்டும்’’ எனத் தெரிவித்தார்.