Congress president Sonia Gandhi said I am retiring Congress president Sonia Gandhi said today.

காங்கிரஸ் தலைவராக ராகுல் காந்தி இன்று பதவி ஏற்க இருக்கும் நிலையில், ‘நான் ஓய்வு பெறுகிறேன்’ என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தெரிவித்தார்.

ஆனால், அவர் கூறியதை சிலர் திரித்துக் கூறியதால், ஏற்பட்ட குழப்பத்துக்கு காங்கிரஸ் கட்சி விளக்கம் அளித்துள்ளது.

மேலும், 2019ம் ஆண்டு நடக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் ரேபரேலி தொகுதியில் சோனியா காந்திக்கு பதிலாக அவரின் மகள் பிரியங்கா காந்தி வத்ரா போட்டியிடுகிறார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

சோனியா பேட்டி

நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடர் நேற்று தொடங்கியது. இதில் கலந்து கொள்வதற்காக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி நாடாளுமன்றத்துக்கு காலையில் வந்தார். அப்போது தனியார் தொலைக்காட்சிக்கு ஒன்றுக்கு அவர் பேட்டி அளித்தார்.

விடைபெறுகிறேன்

காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற குழுத்தலைவராக தொடர்வீர்களா? என சோனியா காந்தியிடம் நிருபர் கேள்வி எழுப்பினார். அதற்கு அவர் “ நான் ஓய்வு பெறு நேரம் வந்துவிட்டது’’ என்று தெரிவித்தார்.

குழப்பம்

காங்கிரஸ் தலைவராக ராகுல் காந்தி இன்று அதிகாரப்பூர்வமாக பொறுப்பு ஏற்கும் நிலையில், சோனியா காந்தி அரசியலில் இருந்து ஓய்வு பெறப்போகிறேன் என்று கூறினாரா? அல்லது காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து ஓய்வு பெறுகிறேன் எனக் கூறினாரா? என்ற குழப்பம் நிலவியது.

காங்கிரஸ் விளக்கம்

இது குறித்து காங்கிரஸ் கட்சியின் செய்தித்தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜிவாலா டுவிட்டரில் விளக்கம் அளித்தார். அவர் வெளியிட்ட பதிவில், “ காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்துதான் சோனியா காந்தி நாளை(இன்று) ஓய்வு பெறுகிறார். அவர் அரசியலில் இருந்து அல்ல. சோனியாவின் ஆசிகள், அறிவுரைகள், வழிகாட்டுதல்கள் எப்போதும் காங்கிரஸ் கட்சியை வழிநடத்திச் செல்ல துணை புரியும்’’ என்று தெரிவித்தார்.

பிரியங்காவின் அரசியல் பிரவேசம்

கடந்த 2004ம் ஆண்டில் இருந்து உத்தரப்பிரதேசத்தில் உள்ள ரேபரேலி மக்களவைத் தொகுதியில் சோனியா காந்தி போட்டியிட்டு வருகிறார். அவருக்கு துணையாக அவரின் மகள் பிரியங்கா காந்தி வத்ராவும் பிரசாரம் செய்து வருகிறார். இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ பேஸ்புக் பக்கத்தில், ‘ அமேதி,ரேபரேலி தொகுதியின் கதை என்ற தலைப்பிட்டு பிரியங்கா காந்தி மற்றும் ராகுல் காந்தியின் புகைப்படமும் பதிவிடப்பட்டுள்ளது.

இதற்கிடையை 2019ம் ஆண்டு நடக்கும் நாடாளுமன்றத்தேர்தலில் ரே பரேலி தொகுதியில் சோனியா காந்தி போட்டியிடமாட்டார், அந்த தொகுதியில் பிரியங்கா காந்தி வத்ரா முதல் முறையாக அரசியல் பிரவேசம் செய்ய உள்ளார் என காங்கிரஸ் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. நீண்ட காலம், காங்கிரஸ் தலைவராக 19 ஆண்டுகள் சோனியா காந்தி செயல்பட்டுள்ளார். ஆதலால் அவருக்கு கவுரப் பதவி ஏதும் கொடுக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.


காங்கிரஸுக்கு திரும்பு பா.ஜனதா தலைவர்
இந்திரா காந்தி குடும்பத்தில் இருந்து உருவாகி பா.ஜனதாவில் மத்திய அமைச்சராக இருந்துவருபவர் மேனகா காந்தி. இவரின் மகன் வருண் காந்தி, உத்தரப்பிரதேசத்தின் சுல்தான்பூர் தொகுதி எம்.பி.யாக உள்ளார். பா.ஜனதா கட்சியின் தலைவர்களுக்கும், வருண் காந்திக்கும் சமீபகாலமாக மோதல் போக்கு நீடித்து வருகிறது. ஆதலால், விரைவில் காங்கிரஸ் பக்கம் செல்ல அவர் திட்டமிட்டுள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.