காங்கிரஸ் காரிய கமிட்டி உறுப்பினர்கள் மாற்றியமைத்து அக்கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உத்தரவிட்டுள்ளார்
காங்கிரஸ் கட்சியில் உச்சபட்ச முடிவெடுக்கும் அதிகாரம் கொண்ட அமைப்பாக காங்கிரஸ் காரிய கமிட்டி உள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் ராய்ப்பூரில் நடந்த மாநாட்டில் காங்கிரஸ் காரிய கமிட்டிக்கு உறுப்பினர்களை நியமிக்கும் அதிகாரம் கட்சியின் அகில இந்திய தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு வழங்கப்பட்டது.
இந்த நிலையில், காங்கிரஸ் காரிய கமிட்டி உறுப்பினர்கள் மாற்றியமைத்து அக்கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உத்தரவிட்டுள்ளார். அதன்படி, காங்கிரஸ் காரிய கமிட்டி உறுப்பினர்களாக 39 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். நிரந்தர அழைப்பாளர்களாக 32 பேரும், சிறப்பு அழைப்பாளர்களாக 13 பேரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
காங்கிரஸ் காரிய கமிட்டியில் மல்லிகார்ஜூன கார்கே, சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, அதிர் ரஞ்சன் சவுத்ரி, ஏ.கே.ஆண்டனி, ப.சிதம்பரம், சச்சின் பைலட், கே.சி.வேணுகோபால், சசி தரூர், அம்பிகா சோனி, அஜய் மக்கான், ஜெய்ராம் ரமேஷ், அபிஷேக் மனு சிங்வி, திக் விஜய் சிங், ரன்தீப் சிங் சுர்ஜேவாலா, முகுல் வாஸ்னிக், ஆனந்த ஷர்மா உள்ளிட்ட 39 பேர் காங்கிரஸ் காரிய கமிட்டி உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
சுவாரஸ்யமாக, சோனியா காந்தியின் கீழ் கட்சியின் தலைமை குறித்து கேள்வி எழுப்பிய 23 தலைவர்கள் அடங்கிய குழுவில் இடம்பெற்றிருந்த சசி தரூர், ஆனந்த் சர்மா மற்றும் முகுல் வாஸ்னிக் ஆகியோர் புதிய காங்கிரஸ் காரிய கமிட்டி உறுப்பினர்களில் அடங்குவர். அக்குழுவில் இடம்பெற்றிருந்த மணீஷ் திவாரி மற்றும் வீரப்ப மொய்லி ஆகியோர் நிரந்தர அழைப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
சீனா விவகாரம்: பிரதமர் மோடி சொல்வது உண்மையல்ல - ராகுல் காந்தி பரபரப்பு குற்றச்சாட்டு!
பஞ்சாப் முன்னாள் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி மற்றும் பிரதீபா சிங் ஆகியோரும் குழுவில் இடம்பெற்றுள்ளனர். ராஜஸ்தானில் கட்சியின் அரசாங்கத்திற்கு எதிராக கிளர்ச்சி செய்து பின்னர் துணை முதல்வர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட சச்சின் பைலட்டும் புதிய காங்கிரஸ் காரிய கமிட்டி உறுப்பினர்களில் ஒருவராக நியமிக்கப்பட்டுள்ளார். தமிழகத்தை பொறுத்தவரை முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் மட்டுமே இடம்பெற்றுள்ளார்.
