நாட்டின் மிகப்பெரிய மதசார்பற்ற கட்சி காங்கிரஸ்: ஒய்.எஸ்.ஷர்மிளா புகழாரம்!
நாட்டின் மிகப்பெரிய மதசார்பற்ற கட்சியாக காங்கிரஸ் இன்னும் இருக்கிறது என ஒய்.எஸ்.ஷர்மிளா புகழாரம் சூட்டியுள்ளார்
ஒருங்கிணைந்த ஆந்திர முதல்வராக இருந்த மறைந்த ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் மகளும், ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் சகோதரியுமான ஒய்.எஸ்.ஷர்மிளா, காங்கிரஸ் கட்சியில் இன்று இணைந்துள்ளார். அக்கட்சியின் அகில இந்திய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் முன்னிலையில் காங்கிரஸ் கட்சியில் இணைந்த அவர், ஒய்.எஸ்.ஆர்.தெலங்கானா கட்சியையும் காங்கிரஸ் கட்சியுடன் இணைத்துள்ளார்.
தெலங்கானா மாநில சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக இந்த இணைப்பு நடக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், காங்கிரஸ் கட்சிக்கு தனது ஆதரவை மட்டும் அளித்த ஒய்.எஸ்.ஷர்மிளா, இன்று அக்கட்சியில் இணைந்துள்ளார்.
இணைப்புக்கு பின்னர் பேசிய ஒய்.எஸ்.ஷர்மிளா, தெலுங்கு மக்களுக்கு மட்டுமல்லாமல் தன் வாழ்நாள் அனைத்தையும் காங்கிரஸ் கட்சிக்காக அர்ப்பணித்த தனது தந்தையின் வழியை பின்பற்றி காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளதாக தெரிவித்தார். மேலும், நமது நாட்டின் மிகப்பெரிய மதசார்பற்ற கட்சியாக காங்கிரஸ் இன்னும் இருக்கிறது. காங்கிரஸ் எப்போதும் இந்தியாவின் உண்மையான கலாச்சாரத்தை நிலைநிறுத்தி, நமது தேசத்தின் அடித்தளத்தை கட்டியெழுப்புகிறது எனவும் அவர் புகழாரம் சூடினார்.
நாகர் பாணி கட்டடம்.. 5 மண்டபங்கள்.. அயோத்தி ராமர் கோயிலின் முக்கிய அம்சங்கள் என்னென்ன?
தெலங்கானாவில் ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்ற நோக்கில் கடந்த 2021ஆம் ஆண்டில் ஒய்.எஸ்.ஆர்.தெலங்கானா எனும் தனிக்கட்சியை ஆரம்பித்து அதன் தலைவராக செயல்பட்டு வந்தார். ஆனால், தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் யாரும் அவரது கட்சிக்கு இல்லை. ஒன்றுபட்ட ஆந்திர மாநிலத்தில் இரண்டு முறை முதல்வராக இருந்து கடந்த 2008ஆம் ஆண்டில் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் மகளான ஒய்.எஸ்.ஷர்மிளாவின் வருகை மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஊக்கமளித்து தேர்தலில் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் செல்வாக்கை அறுவடை செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.