காங்கிரஸ் கட்சி மிக மோசமான நிலையில் உள்ளதாக கட்சியின் மூத்த தலைவரான சல்மான் குர்ஷித் கூறியிருந்த நிலையில், ஜோதியராதித்ய சிந்தியாவும்  அக்கட்சிக்கு சுயபரிசோதனை அவசியம் என்று கருத்து தெரிவித்துள்ளது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. 

மக்களவைத் தேர்தலில் ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் கட்சி மிக மோசமான தோல்வியைச் சந்தித்தது. நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி அந்தஸ்தைக்கூட 2-வது முறையாகப் பெறமுடியாத சூழலுக்குத் தள்ளப்பட்டு 52 இடங்களில் மட்டுமே வென்றது. இதனால், தோல்விக்குப் பொறுப்பேற்று, ராகுல் காந்தி தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக தெரிவித்தார். ராகுல் காந்தியின் ராஜினாமா முடிவை ஏற்காத மூத்த தலைவர்கள் அவரைப் பதவியில் தொடர வலியுறுத்தினர். ஆனால், பிடிவாதமாக இருந்த ராகுல் காந்தி, தனது பதவியை ராஜினாவை செய்வதில் உறுதியாக இருந்தார். இதையடுத்து, இடைக் காலத்தலைவராக சோனியா காந்தி தேர்வு செய்யப்பட்டார்.

இதுபற்றி காங்கிரஸ் மூத்த தலைவர் சல்மான் குர்ஷித் கூறுகையில் கட்சி தலைவர் பதவியை ராகுல் ராஜினாமா செய்ததால் கட்சி நெருக்கடியில் உள்ளதாகவும், தள்ளாட்டமான சூழலை சந்தித்து வருகிறது என கூறினார். காங்கிரஸ் தனது நிலை குறித்து விவாதித்து தீர்வை ஏற்படுத்த வேண்டும் எனக் கூறியிருந்தார்.

இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய ஜோதியராதித்ய சிந்தியா, மற்றவர்களின் கருத்துக்கள் பற்றி நான் ஏதும் சொல்ல விரும்பவில்லை. கட்சியின் நிலைமையை ஆய்வு செய்து, மேம்படுத்த வேண்டும். அதற்க சில மணி நேரம் போதும். உடனடியாக கட்சியின் நிலைமை சரி செய்து காப்பாற்றாவிட்டால் கட்சி பேரழிவை சந்திக்கும் என்றார். மேலும், காங்கிரஸ் சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டிய தேவை கட்டாயம் உள்ளது. இதில் எந்த சந்தேகமும் இல்லை, எனக் கூறினார்.

இதனிடையே கடந்த சில மாதங்களாகவே ஜோதியராதித்ய சிந்தியா தலைமை மீது அதிருப்தியில் இருப்பதால் பாஜகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியான நிலையில் காங்கிரஸ் குறித்து அவர் பேசியுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.