காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமைப் பயணத்தில் கலந்துகொண்ட அக்கட்சியின் எம்.பி. சவுத்ரி சந்தோக் சிங் உயிரிழந்துள்ளார்.

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமைப் பயணம் தமிழகம், கேரளா, கர்நாடகா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், மராட்டியம், உத்தரபிரதேசம் எனப் பல மாநிலங்கள் வழியாக 2022 டிசம்பர் 24ஆம் தேதி டெல்லியை அடைந்தது. மீண்டும் ஜனவரி 6ஆம் தேதி ஹரியானாவில் தொடங்கிய இந்தப் பயணம் பஞ்சாப் மாநிலத்தில் நுழைந்துள்ளது.

சனிக்கிழமை இந்த நடை பயணத்தில் அக்கட்சியின் எம்.பி. சவுத்ரி சந்தோக் சிங் கலந்துகொண்டார். பில்லார் பகுதியை அடைந்தபோது அவர் திடீரென மயங்கி விழுந்தார். உடனடியாக லூதியானாவில் உள்ள மருத்துவனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

மருத்துவமனை கொண்டுசெல்லப்பட்ட சவுத்ரி ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துவிட்டனர். தகவல் அறிந்து ராகுல் காந்தியும் மருத்துவமனைக்கு விரைந்தார். சந்தோக் சிங் மரணத்தால் ராகுலின் நடை பயணம் இன்று ஒருநாள் ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது.

Scroll to load tweet…

சவுத்ரியின் திடீர் மரணத்திற்கு காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான், முன்னாள் முதல்வர் கேப்டன் அம்ரீந்தர் சிங் உள்ளிட்ட கட்சியின் மூத்த தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவும் சந்தோக் சிங் மரணத்துக்கு இரங்கல் தெரிவித்திருக்கிறார்.