மறைக்க எதுவும் இல்லையென்றால் என் கேள்விகளுக்கு பதில் சொல்லுங்கள் என்று காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி தேர்தல் ஆணையத்திடம் தெரிவித்துள்ளார். என்ன நடந்தது? என்பது குறித்து பார்ப்போம்.
Rahul Gandhi Criticizing Election Commission: மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. காங்கிரஸ் படுதோல்வி அடைந்திருந்தது. மகாராஷ்டிரா தேர்தலில் தேர்தல் ஆணையமும் பாஜகவும் சேர்ந்து முறைகேடு செய்ததாக ராகுல் காந்தி பகீர் குற்றம் சாட்டியிருந்தார். தேர்தல் ஆணையர்கள் நியமனம் முதல் வாக்குப்பதிவு சதவீதம் வரை முறைகேடுகள் நடந்ததாக அவர் கூறியிருந்தார். ஆனால் தேர்தல் ஆணையம் இதை மறுத்துள்ளது.
தேர்தல் ஆணையத்திடம் கேள்வி எழுப்பிய ராகுல் காந்தி
ராகுல் காந்தி அரசியல் காரணங்களுக்காக தேர்தல் ஆணையம் மீது வீண் பழி சுமத்துவதை ஏற்றுக் கொள்ள முடியாது என பாஜக கண்டனம் தெரிவித்து இருந்தது. இந்நிலையில், சமீபத்தில் நடந்த அனைத்து மக்களவை, சட்டமன்றத் தேர்தல்கள் குறித்த விவரங்களையும் வெளியிட வேண்டும் என்று ராகுல் காந்தி கூறியுள்ளார். வாக்காளர் பட்டியல், வாக்குப்பதிவு சதவீதம் உள்ளிட்ட தகவல்களை வெளியிட்டு சந்தேகங்களைத் தீர்க்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். மகாராஷ்டிரா தேர்தலில் வாக்குப்பதிவுக்குப் பிறகு வாக்குப்பதிவு சதவீதத்தில் ஏற்பட்ட திடீர் அதிகரிப்பு சந்தேகத்தை எழுப்புவதாக ராகுல் சுட்டிக்காட்டினார்.
ராகுல் காந்திக்கு தேசியவாத காங்கிரஸ் ஆதரவு
இதுகுறித்து தெளிவுபடுத்த வாக்குச்சாவடிகளில் உள்ள சிசிடிவி காட்சிகளை வெளியிட வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். மறைக்க எதுவும் இல்லையென்றால் என் கேள்விகளுக்கு தேர்தல் ஆணையம் பதில் சொல்ல வேண்டும் எனவும் ராகுல் காந்தி கூறியுள்ளார். தேர்தல் ஆணையம் தொடர்ந்து அலட்சியப்படுத்துவதால் ராகுல் கடுமையான நிலைப்பாட்டை எடுக்க வேண்டியுள்ளதாக தேசியவாத காங்கிரஸ் கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது.
ராகுல் காந்திக்கு பாஜக கண்டனம்
அதே வேளையில் மக்கள் தீர்ப்பை ராகுல் காந்தி அவமதிப்பதாக பாஜக குற்றம் சாட்டியுள்ளது. ராகுலின் குற்றச்சாட்டை மறுத்து மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் பதில் கட்டுரை எழுதியுள்ளார். கடந்த நான்கு சட்டமன்றத் தேர்தல்களிலும் மக்களவைத் தேர்தலை விட அதிக வாக்குப்பதிவு சதவீதம் பதிவாகியுள்ளது. வாக்குப்பதிவு சதவீதம் அதிகமாக இருந்த இடங்களில் காங்கிரஸ் கூட்டணியும் வெற்றி பெற்றுள்ளது. புதிய வாக்காளர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் முதல்முறை வாக்காளர்கள் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
தேர்தல் விவரங்களை வழங்கும் தேர்தல் ஆணையம்
இந்த விவகாரத்தை காங்கிரஸ் டெல்லி உயர் நீதிமன்றத்துக்கு கொண்டு சென்ற நிலையில், ஹரியானா, மகாராஷ்டிரா தேர்தல் தகவல்களை வழங்கத் தயாராக இருப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. அதாவது 2009 முதல் 2024 வரையிலான மக்களவை, சட்டமன்றத் தேர்தல்களின் வாக்காளர் பட்டியல் குறித்த தகவல்களை தேர்தல் ஆணையம் வழங்க உள்ளது.


