கர்நாடகாவில் கடந்த 2 நாட்களாக நடைபெறுவது ஜனநாயக படுகொலை என மாநிலங்களவையில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் ஆவேசமாக பேசியுள்ளார். 

இதுகுறித்து மாநிலங்களவையில் அவர் பேசுகையில், பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடத்த வந்தோம் என பாரதியாரின் பாடலை சுட்டிக்காட்டி மாநிலங்களவையில் பட்ஜெட் தாக்கல் செய்த நிர்மலா சீதாராமனுக்கு ப.சிதம்பரம் பாராட்டு தெரிவித்தார். தற்போதைய நிதி அமைச்சர் தமிழகத்தை சேர்ந்தவர் என்பது கூடுதல் மகிழ்ச்சியளிக்கிறது. 

மேலும் அவர் பேசுகையில், ஜனநாயகம் தினமும் ஒரு அடிவாங்கி வருகிறது. கர்நாடகா, கோவாவில் நிலவும் அரசியல் சூழலை சுட்டிக்காட்டி அவர் பேசியுள்ளார். நிதி ஒதுக்கீடு தொடர்பான விவரங்கள் பட்ஜெட் உரையில் இடம்பெறாதது ஏன்? என கேள்வி எழுப்பியுள்ளார். 2020-ல் நாட்டின் வளர்ச்சி விகிதம் எவ்வளவு என்பதை அரசால் கணிக்க முடியவில்லை. நாட்டின் பொருளாதார கட்டமைப்பை சீர்திருத்தம் செய்வது தொடர்பான அறிவிப்புகள் எதுவும் பட்ஜெட்டில் இல்லை என விமர்சித்தார். 

அரசியல் ஸ்திரமின்மை குறித்து அவர்கள் கேட்பது மற்றும் படிப்பது பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும். வெளிநாட்டு முதலீட்டாளர்கள், மதிப்பீட்டு முகவர், உள் நிறுவனங்கள் இந்திய ஊடகங்களைப் பின்பற்றுவதில்லை என அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்து பேசினார்.