குஜராத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் சங்கர்சிங் வகேலா மற்றும் 6 எம்.எல்.ஏ.க்கள் காங்கிரசை விட்டு விலகினார்கள். நேற்று நடைபெற்ற மாநிலங்களவை தேர்தலில், இவர்கள் 7 பேரும் பா.ஜனதாவுக்கு ஆதரவாக வாக்களித்தனர்.

அத்துடன் பெங்களூரில் தங்க வைக்கப்பட்டு இருந்த 44 காங்கிரஸ் வேட்பாளர்களில் ஒருவரான கம்ஷி படேலும் பா.ஜனதாவுக்கு வாக்களித்து இருப்பதாக, காங்கிரஸ் தலைவர் அசோக் கெலாட் நேற்று ஓட்டுப்பதிவு முடிந்ததும் நிருபர்களிடம் தெரிவித்தார்.

இருப்பினும் 43 காங்கிரஸ் உறுப்பினர்கள் தவிர, தேசியவாத காங்கிரசின் ஒரு உறுப்பினரும், ஐக்கிய ஜனதா தளத்தின் ஒரே உறுப்பினரும் காங்கிரசுக்கு ஆதரவாக வாக்களித்து இருப்பதால் (மொத்தம் 45 வாக்குகள்) அகமது படேல் வெற்றி உறுதி என அசாக் கெலாட் நம்பிக்கை தெரிவித்தார்.

பொதுவாக, ஒரு மாநிலத்தில் தேர்தல் நடைபெற்று ஆட்சி அமைக்கும்போது அல்லது ஆட்சி மாற்றத்தின்போது, போதிய பெரும்பான்மை பலம் இல்லாவிட்டால், எம்.எல்.ஏ.க்களை இழுக்கும் குதிரை பேரம் போன்ற நிகழ்வுகள் நடைபெறும்.

ஆனால், குஜராத் மாநிலத்தில் சாதரணமாக நடைபெறும் மாநிலங்களவை தேர்தலின்போது, ஆட்சியைப் பிடிக்கும் அளவுக்கு எம்.எல்.ஏ.க்கள் சொகுசு விடுதியில் தங்க வைப்பது போன்ற நிகழ்வுகள் அரங்ேகறி இருப்பது குறிப்பிடத்தக்கது.

காங்கிரஸ் கட்சியின் தலைவரான சோனியா காந்தியின் வலது கரமாக திகழும் அவருடைய அரசியல் செயலாளர் அகமது படேல் 5-வது முறையாக இந்த தேர்தலில் மாநிலங்களவைக்கு போட்டியிட்டார்.

அவரை தோற்கடிக்க பா.ஜனதாவும், வெற்றி பெற வைக்க காங்கிரசும் உறுதியாக இருந்ததால் இந்த தேர்தல் நாடு முழுவதும் எதிர்பார்ப்பை தூண்ட வைத்துவிட்டது.