முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியை தவறான நிலையில் சித்தரித்து விட்டதாக பிரபல நடிகர் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. திரையுலகில் பிரபலமான இயக்குநராக இருந்தாலும், புதுமுக இயக்குநராக இருந்தாலும், தான் சொல்ல வருவதை, எவ்வித சமரசமும் இன்றி முழுமையாக சொல்லி, அதை திரைப்படமாக எடுத்தால், அதில் ஏகப்பட்ட பிரச்சனைகள் உருவாகுவது வாடிக்கையாகிவிட்டது. எதுவுமே இல்லாவிட்டாலும், சிலர் விளம்பரத்துக்காகவும், தயாரிப்பாளர்களிடம் பணம் பறிப்பதற்காகவும் பிரச்சனையை கிளப்புகின்றனர். திரைப்படத்தை வெளியிட போடப்படும் இவ்வித  தடைகற்கள் எதுவும் வெப்சீரிஸ்களுக்கு இல்லை.வெப்சீரிஸ்களுக்கு சென்சார் சான்றிதழ் தேவையில்லை என்பதால், தாங்கள் விரும்பும் அளவுக்கு வன்முறை காட்சிகளையும், செக்ஸ் காட்சிகளையும் அள்ளிவீசி, பார்வையாளர்களை வலையில் வீழ்த்தும் வித்தையை இயக்குநர்கள் செய்து வருகின்றனர். யூ டியூப்பில் வெளியாகும் வெப் சீரிஸ்களுக்கு சில கட்டுப்பாடுகள் இருந்தாலும், நெட்பிளிக்ஸில் வெளியாகும் வெப் சீரிஸ்களுக்கு எவ்வித கட்டுப்பாடும் இல்லை என்பதால், அதில் வரும் தொடர்களில் ஆபாசக் காட்சிகளுக்கு அளவே இல்லாமல் போய்விட்டது. இந்த நிலையில் தான், சீக்ரெட் கேம்ஸ் என்ற வெப் சீரிஸ் சர்ச்சையில் சிக்கியுள்ளது.

சைஃப் அலிகான், நவாசுதீன் சித்திக், ராதிகே ஆப்தே ஆகியோர் நடித்து ஒவ்வொரு வாரமும் வெளியாகும் இந்த தொடரில், ஒரு நேர்மையான காவல் அதிகாரிக்கும், நிழல் உலக தாதாவுக்கும் இடையே நடக்கும் மோதல்தான் கதையாக்கப்பட்டுள்ளது. ஆடைகளுக்கு பஞ்சம் வைத்து, நிர்வாண காட்சிகளுக்கு பஞ்சமே இல்லாமல் எடுக்கப்பட்டுள்ள இந்த வெப்சீரிஸில், ஆளும் அரசுகள், அரசாங்கத்தின் தவறான முடிவுகள், அதனால் ஏற்படும் சறுக்கல்கள் என இன்றைய அரசியல் சூழலும், குற்றங்களும் பின்னிப் பிணைந்து கிடக்கின்றன.இந்திரா காந்தி ஆட்சிக்காலத்தில் 1975ஆம் ஆண்டில் கொண்டுவரப்பட்ட அவசர நிலை, போபர்ஸ் ஊழல் மற்றும் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொண்டுவந்த முஸ்லிம் பெண்கள் (மணமுறிவு உரிமைகள் பாதுகாப்பு) சட்டம் ஆகியவை குறித்த காட்சிகளும் இந்த வெப்சீரிஸில் இடம்பெற்றுள்ளன. இந்த நிலையில், சீக்ரெட் கேம்ஸ் வெப்சீரிஸை தடுத்த நிறுத்த வேண்டும் என்றும், அதன் நடிகர் நவாசுதீன் சித்திக், இயக்குநர் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரி, மேற்கு வங்க காங்கிரஸ் பிரமுகர் ராஜீவ் குமார் சின்ஹா காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.

சீக்ரெட் கேம்ஸ் தொடரில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளதாகவும், அவர் குறித்த ஆபாச வார்த்தை இடம்பெற்றுள்ளதாகவும், ராஜீவ் காந்தியை பெண்ணுறுப்பு ஒன்ற கூறி வசை பாடுவது போன்றும் காட்சிகள் இருப்பதாக கூறியுள்ள அவர், இந்திய திரைத்துறையின் அனைத்து வரம்புகளும் மீறப்பட்டுள்ளதாக குற்றஞ்சாட்டியுள்ளார். இதையடுத்து, கொல்கத்தா காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.